மீண்டார் என உவந்தேன் - திருக்கோவையார்
தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". ----- திருக்கோவையார், பாடல் 244. பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் எட்டாம் திருமுறையாக அமைந்தன. திருக்கோவையாரில் 244 ம் பாடலே நாம் இன்று எடுத்தோதுவது. இப்பாடல் நாயகன் - நாயகி பாவத்தில் அமைந்த அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். பாடியவர் ஆணானாலும் பெண்ணானாலும் தம்மைத் தலைவியாகவும் தம் இறைவனைத் தலைவனாகவும் மனதில் வரிந்து பாடும் மரபு (genre) நாயகன் - நாயகி பாவம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இப்பாடலில் சங்க கால முறைமையின் வழி, தலைவனுடன் களவொழுக்கம் கொண்ட தலைவி அவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு செல்கிறாள். அவர்களைத் தேடி அழைத்து வர தலைவியின் செவிலித்தாய் (Foster mother) எதிர் வருவோரை விசாரித்தவாறு செல்கிறாள். தூரத்தில் இதே போல் உடன்போக்க...