முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் - திருத்தாண்டகம்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
- சுப.சோமசுந்தரம்
"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே".
-------ஆறாம் திருமுறை, (திருவாரூர்) திருத்தாண்டகம், பாடல் 7.
பாடற் குறிப்பு :
பன்னிரு திருமுறைகளில் 4,5,6 திருமுறைகள் திருநாவுக்கரசருக்கு உரியவை. 6 ம் திருமுறையில் 25 ம் பகுதியான (திருவாரூர்) திருத்தாண்டகத்தில் பாடல் 7 நாம் தற்போது எடுத்துள்ளது. இப்பாடல் நாயகன் - நாயகி பாவத்தில் அமைந்த அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். பாடியவர் ஆணானாலும் பெண்ணானாலும் தம்மைத் தலைவியாகவும் தம் இறைவனைத் தலைவனாகவும் (இங்கு திருவாரூர் இறைவனாகிய சிவபெருமானை) மனதில் வரிந்து பாடும் மரபு (genre) நாயகன் - நாயகி பாவம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இப்பாடலில் சங்க கால முறைமையின் வழி, தலைவனுடன் களவொழுக்கம் கொண்ட தலைவி அவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு செல்கிறாள்; தலைவியின் நிலையை அவளது செவிலித்தாய்க்கு (Foster mother) தலைவியின் தோழி எடுத்தியம்புவதாய் வருகிறது.
பாடற் பொருள் :
முதலில் அவனது பெயரைக் (நாமம்) கேட்டாள் (தலைவி). தலைவனின் (மூர்த்தி) தன்மை (வண்ணம்) கேட்டாள். பின்பு அவனது ஆரூர் (திருவாரூர்) பற்றிக் கேட்டாள். தனது நிலையையே மாற்றி (பெயர்த்தும்) அவன் மீது பைத்தியம் (பிச்சி) ஆனாள் (தீராக் காதலால்). தாயையும் தந்தையையும் (அத்தன்) அன்றே நீங்கினாள். சுற்றம், சமூகம் போன்ற உலகோர் (அகலிடத்தார்) வகுத்த நெறிமுறைகளைக் (ஆசாரத்தை) கைவிட்டாள் (அகன்றாள்). தன்னையே மறந்தாள். தன் புகழ் மங்கினாள் (நாமம் கெட்டாள்). நங்கையானவள் தன் தலைவன் வழியே (தாளே; தாள் - பாதம்) நடந்தாள் (தலைப்பட்டாள்).
பின் குறிப்பு :
உலகியல் உறவுகள், விருப்புகள், கட்டுகள் அனைத்தையும் துறந்து இறைவனோடு ஒன்றும் நிலையைக் குறியீடாகச் (symbolism) சொல்லும் பாடல்.
Comments
Post a Comment