Posts

Showing posts from May, 2020

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பிம துசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்" -----நாச்சியார் திருமொழி, வாரணம் ஆயிரம், பாடல் 6. பாடற் குறிப்பு : நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கண்ணனைத் தன் தலைவனாய் மனதில் வரிந்து உருகிய இறைநிலைக் காதலே பாடு பொருளானது. அதில் 'வாரணம் ஆயிரம்' எனும் ஆறாம் திருமொழியில், இவர்களது திருமணக் கோலாகலம் ஆண்டாள் நாச்சியாரின் கற்பனையில் விரிகிறது. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பமாகும் 'வாரணம் ஆயிரம்' இந்த ஆறாம் பாடலில், நாயகன் நாயகியின் கரம் பற்றும் அந்த சரியான தருணத்தைப் படம் பிடிக்கிறது. பாடற் பொருள் : மத்தளங்கள் கொட்டுகின்றன; வரிசங்குகள் (சங்குகளில் ஒரு வகை - வரிகள் உள்ளவை) முழங்குகின்றன; முத்துக்கள் உடைய மாலைகள் (தாமம்) வரிசையாய் (நிரை), நீளமாய்த் தொங்கும் அளவு கட்டப்பட்ட  (தாழ்ந்த) பந்தலின் கீழ், மைத்துனன் (அப்போது தன் தலைவனைத் தலைவி குறிக்கும் முறை) நம்பி மதுசூதனன் வந்து என் கரம் (கைத்தலம் - கை+தலம்) பற்றுவதாய் நான் கனாக் கண்டேன் (க

கூறும் நாவே முதலாக - குழைத்த பத்து - திருவாசகம்

"கூறும் நாவே முதலாகக்     கூறுங் கரணம் எல்லாம்நீ தேறும் வகைநீ திகைப்பும்நீ     தீமை நன்மை முழுதும்நீ வேறோர் பரிசிங் கொன்றில்லை     மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகைஎன் சிவலோகா     திகைத்தால் தேற்ற வேண்டாவோ". பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது; 51 பகுதிகளைக் கொண்டது; 33 ம் பகுதியான 'குழைத்த பத்து' வில் பாடல் 5 தற்போது நாம் எடுத்துள்ள பாடல். பாடற் பொருள் : 'அனைத்தும் நீயே' எனும் சரணாகதி நிலையில் இறைவனிடம் நிற்கும் பாடல். "சொல்லும் சொல் (கூறும் நா) முதற்கொண்டு செய்யும் செயல் (கூறுங் கரணம்) அனைத்தும் நீ ! எனது தெளிவும் (தேறும் வகை நீ), தெளியாத எனது குழப்பமும் (திகைப்பும்) நீ ! எனது தீமை, நன்மை முழுதும் நீ (எனது தீச்செயல், நற்செயல் அனைத்தையும் ஆற்றுபவன் நீ) ! உனையன்றி வேறோர் பரிசு எனக்கு இங்கு ஏதுமில்லை. மெய்ப்பொருளான உன்னை விரிவாக விளக்க முற்பட்டால், நான் தேறுவேனா ? (தேறும் வகை என்?) (அதாவது, உன்னை முழுமையாக விரித்துரைக்கும் அளவு நான் விளக்கம் பெற்றவனா?). என் சிவலோகனே ! அச்சமயத்த

மழை வேண்டி - திருவெம்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் ! ----திருவெம்பாவை, பாடல் 16. பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது; 51 பகுதிகளைக் கொண்டது; 7 ம் பகுதியான திருவெம்பாவையில் பாடல் 16 தற்போது நாம் எடுத்துள்ள பாடல். திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் அதிகாலையில் கன்னிப் பெண்கள், பாவை நோன்பில்  தமக்கு சிவனடியார் ஒருவரே மணவாளனாய் வர  வேண்டியும், உலகோர்க்கு இறையருளுடன் வளம் பல வேண்டியும் இறைவனைப் (சிவபெருமானை, உமையவளை) பலவாறு போற்றிப் பாடுவது திருவெம்பாவை. குறிப்பாக இப்பாடல் உலகோர்க்கு மழை வளம் வேண்டி உமையம்மையைப் போற்றிப் பாடுவது. பாடற் பொருள் : மேகமே (மழையே) ! கடல் நீரை அணுகி (முன்னி)  ஆவியாகச் சுருக்கி எழுந்து

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - திருப்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!" ----திருப்பாவை, பாடல் 3. பாடற் குறிப்பு :  திருநாலாயிரத்தின் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்) பகுதியான   திருப்பாவை, ஆண்டாள் நாச்சியார் அருளிய 30 பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் இறைவனிடம் (கண்ணனிடம், திருமாலிடம்) தமக்காக நல்ல மணாளனையும், உலகோர்க்கு மழை முதலிய வளங்களையும்  வேண்டி மேற்கொள்ளும் பாவை நோன்பில் பாடுவதாய் அமைவது. குறிப்பாக இப்பாடல், பெருமாளை வேண்டி பாவை நோன்பு மேற்கொண்டால், அதன் பயனாய் மழைவளம் பெருகி, உலகில் நெல்வளமும் பால் வளமும் (ஆநிரைச் செல்வம்) பெருகும் எனப் பாவையர் தமக்குள் பாடிச் சொல்வது. பாடற் பொருள் : (வாமன அவதாரத்தில்) ஓங்கி உலகளந்த உத்தமனின் (திருமாலின்) புகழ் (பேர்) பாடி, நாம் பாவை ந

பாவையைத் துயிலெழுப்புதல் - திருவெம்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீதென்ன உறக்கமோ வாய் திறவாய் ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய். ---------திருவெம்பாவை, பாடல் 8. பாடற் குறிப்பு : பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது; 51 பகுதிகளைக் கொண்டது; 7 ம் பகுதியான திருவெம்பாவையில் பாடல் 8 தற்போது நாம் எடுத்துள்ள பாடல். திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் அதிகாலையில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பில்  தமக்கு சிவனடியார் ஒருவரே மணவாளனாக  வேண்டியும், உலகோர்க்கு இறையருளுடன் வளம் பல வேண்டியும் இறைவனைப் (சிவபெருமானை, உமையவளை) பலவாறு போற்றிப் பாடுவது திருவெம்பாவை. குறிப்பாக இப்பாடல், கண்ணயர்ந்து துயிலும் பாவையை ஏனைய பாவையர்  அதிகாலையில் பாவை நோன்பிற்காகத் துயிலெழுப்புவது. பாடற் பொருள் : கோழியின் கூவலும், பறவைகளின் (குருகு)  ஆரவாரமும், இசைக்கருவிகளினால்  எழும் ஏ

பாவையைத் துயிலெழுப்புதல் - திருப்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்". ----திருப்பாவை, பாடல் 7 பாடற் குறிப்பு : திருநாலாயிரத்தின் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்) பகுதியான 'திருப்பாவை' ஆண்டாள் நாச்சியார் அருளிய முப்பது பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் இறைவனிடம் (கண்ணனிடம், திருமாலிடம்) தமக்காக நல்ல மணாளனையும், உலகோர்க்கு மழை முதலிய வளங்களையும்  வேண்டி மேற்கொள்ளும் பாவை நோன்பில் பாடுவதாய் அமைவது. குறிப்பாக இப்பாடல் கண்ணயர்ந்து துயிலும்  பாவையை அதிகாலையில் பாவை நோன்பிற்காகத் துயிலெழுப்புவது. பாடற் பொருள் : கீச்சு கீச்சென்று ஆனைச்சாத்தன் குருவிகள் தமக்குள் கலந்து பேசிக் கொள்ளும் பேச்சு அரவம் உனக்குக் கேட்கவில்லையோ, பேய்ப் பெண்ணே ? காசு, பிறப்பு எனும் இருவகை அணிகலன்களும்  கலகலக்கக் கை மா

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை  வாழிய நிலனே" --------புறநானூறு 187. பாடற் குறிப்பு : பாடியவர் : ஒளவையார். நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ, அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ எனப் பிரித்தல் வேண்டும். வீட்டிற்குப் பெண்ணும், நாட்டிற்கு ஆணும் என  சமூகம் அமைந்த காலகட்டத்தில், ஆடவர் ஒழுக்கமே உலக மேன்மைக்கு அடிப்படை எனப் பகர்வது இச்செய்யுள். ஆடவர் என்பதை மக்கள் எனவும், நல்லவர் என்பதை கடமையுணர்வு கொண்டோர் எனவும் பொருள் கூறுவார் உண்டு. ஆடவர் என்பதை ஆள்வோர் எனப் பொருள் கொள்வாரும் உண்டு. பாடற் பொருள் : நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) - பள்ளமாக - இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே ! பின் குறிப்பு : நாடு என்பது மருதம், காடு என்பது முல்லை, அவல் (பள்ளம்) என்பது நெய்தல், மிசை (மேடு) என்பது குறிஞ்சி என நால்வகை நிலங்களும் குறிக்கப்பெற்றன. பொதுவாக நிலத்தின் தன்மைக்கேற்ப மக்கட்பண்ப

ஒரே பாடலில் இசுலாத்தின் ஐந்து கடமைகளும் - சீறாப்புராணம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "தீதுஇலா மறை பொருளாய் திகழ் ஒளியாய்  நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன், தூதராய் உமையிருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும், காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும்". --------சீறாப்பராணம், இசிறத்துக் காண்டம், உலுமாம்  ஈமான் கொண்ட படலம், பாடல் 5, (4682), வரிகள் 2 - 4. பாடற் குறிப்பு : உலுமாம் ஈமான் அவர்கள் கூறுவதாய்  வருவது. ஒரே பாடலில் இசுலாத்தின் ஐந்து கடமைகளையும் சொல்வது. பாடற் பொருள் : நன்மையே ஓதும் (தீமை இலா) மறை பொருளாகவும், எவ்விடத்தும் திகழும் ஒளியாகவும் நிறைந்த அல்லா, இப்பூவிலகில் தம் தூதராக உம்மை (மகம்மது நபிகள் நாயகத்தை) அனுப்பி, மாந்தர்க்கான ஐந்து கடமைகளையும் (பறுல்) இறைச்செய்தியாகப் பணித்தார் (கழறும்). அவையாவன : ஐந்து வேளையும் தொழுகை, இறையன்புடன் (காதலுடன்) கலிமா, ஈகை (சக்காத்து), நோன்பு (ரமலான் நோன்பு), மக்காவுக்கான புனிதப் பயணம் (கச்சு - ஹஜ்). பின் குறிப்பு : இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து கடமைகள் கலிமா, தொழுகை, நோன்பு, ஈகை, ஹஜ் என வரிசைப்படுத்தப் படும். இலக்கியத்தில் பாடல் ஓசை/இலக்கணம் கருதி மாற

கார்காலம் வரவில்லை எனத் தலைவியைத் தோழி தேற்றியது - நற்றிணை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "மதியின்று மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ வாகலின் மலர்ந்தன பலவே". ----நற்றிணை பாடல் 99, வரிகள் 6 - 10. பாடற் குறிப்பு : பாடியவர் : இளந்திரையனார். மழை பெய்து செடி, கொடிகள் பூத்தமையால்  கார்காலம் வந்ததாய்க் கருதி, அப்பருவத்தில் ஊர் திரும்பும் தலைவன் வரவில்லையே எனத் தலைவி கவலை கொள்கிறாள். "இது பருவம் தப்பிய மழை. கார்காலம் வரவில்லை. எனவே வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றும் பாடலின் சில வரிகள். பாடற் பொருள் : அறிவில்லாது (மதியின்று) மறந்து போய்க் கடல் நீரை முகந்து  நிறைசூலுற்ற (கமஞ்சூல்) மேகம் (மாமழை), பொறுக்க மாட்டாது பெய்த (இறுத்த) பெருமழையைக் (வண்பெயல்) கண்டு,   கார்காலம் என்று மயங்கிய (அயர்ந்த) உள்ளத்தோடு, தேர்ந்து தெளியும் ஆற்றலின்றி (தேர்வில) பிடவமும், கொன்றையும், கோடலும் (மலர் வகைகள்) அறியாமையால் (மடவவாகலின்) மிகுதியாய் (பலவே) மலர்ந்தன. பின் குறிப்பு : பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி  'பருவம் அன்று'

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் - அகநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்" -----அகநானூறு, பாடல் 4, வரிகள் 10-12. பாடற் குறிப்பு : பாடியவர் : குறுங்குடி மருதனார். கார்காலத்தில் போர்கள் நின்று விடும். எனவே போர் மேற்கொண்ட வீரர்களும், வாணிகத்தின் பொருட்டு வெளியூர் சென்றோரும் இல்லம் திரும்புவர். கார் சூழ்ந்த பின்பும் தலைவன் வரவில்லையே என ஏங்குகிறாள் தலைவி. "அவன் உன்னைப் பிரிந்து வாடுவதைப் போல், உன் ஏக்கமும் அறிவான். விலங்கினமும் புள்ளினமும் (பறவையினமும்) இணைபிரிந்தால் படும் துயரைக் கூட உணர்ந்தவன் அவன். எனவே விரைவில் வந்துவிடுவான்" என்று தோழி தலைவியைத் தேற்றும் பாடல். அப்பாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள் இவை. பாடற் பொருள் : பூத்த சோலையில் (பொங்கர்) துணையோடு இணைந்த, மலரின் மகரந்தத்தை (தாது) உண்ணும் வண்டு (பறவை) கலக்கமுறும் (பேதுறல்) என அஞ்சி, தேரின் மணியில் உள்ள நாவினைக் கட்டி வைத்த (ஆர்த்த), மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட தலைவன் அவன் (இங்கு தேரினையுடையவன் எனச் சுட்டப் பெறுகிறான்). அஃதாவது "வண்டின் காதல்

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே - புறநானூற்றுத் தாய்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலைஅறுத் திடுவென்  யான்எனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே"   ----புறநானூறு 278. பாடற் குறிப்பு : பாடியவர் : காக்கைபாடினியார் நச்செள்ளையார். போரில் தனது மகன் புறமுதுகிட்டு இறந்தனன் என்ற (பொய்யான) செய்தி கேட்ட தாய் அவனை இழந்ததை விடத் துயருற்றதும், களத்திலேயே சென்று பார்த்து அவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரமரணம் எய்தினான்  எனக் கண்டு அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வுற்றதுமான மறம் (வீரம்) இப்பாடலில் வரையப் பெறுகிறது. பாடற் பொருள் : நரம்பு தெரிய வாடிய சிறிய மெல்லிய தோள்களும், தாமரை (முளரி) போன்ற விலாப் பகுதியும் (மருங்கு) உடைய முதியவள், தன் மகன் (சிறுவன்) படையின் திசை அழிந்து மாறினான் (அதாவது, புறமுதுகிட்டான்) என்று பலர் கூறக் கேட்டு, "பகை நெருங்கி வந்த போரில் (மண்ட - நெருங்கிய; அமர் - போர்) முறை

நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் - திருவருட்பயன்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலமிலன் பேர்சங் கரன்"    --------திருவருட்பயன், பாடல் 9. திருவருட்பயன் உமாபதி சிவாச்சாரியாரால் அருளப் பெற்றது. அருஞ்சொற்பொருள் : நண்ணுதல் - விழைதல், விரும்புதல்; நண்ணார் - விழையாதார்; நண்ணினர் - விழைந்தவர்; சலம் - அசைவு, அசைவுள்ள பொருள் (அசலம் என்பது அசையாப் பொருள் என்று 'மலை' என்பதற்குக் காரணப் பெயர் ஆனது; ஆகவே வேங்கட மலைக்கு  வேங்கடாசலம் என்றும், அருண மலைக்கு  அருணாசலம் எனவும் வழக்கு). பாடற் பொருள் : தன்னை விழையாதார்க்கு அவன் நலமில்லாதவன்; விழைந்தார்க்கு நலமிக்கவன். அவன் எந்த அசைவும் (இங்கு 'ஒரு பக்க சாய்வும்' எனக் கொள்ளலாம்) இல்லாதவன் (சலம் இலன் - அசைவு இல்லாதவன் - நடுநிலையாளன்). அவன் பெயர் சங்கரன். பின் குறிப்பு : முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையே முரண் இருப்பது போல் தோன்றுவது வெறும் தோற்றமே. இரண்டாவது வரியினாலேயே முதல் வரி விளக்கம் பெற்றது. இரண்டாவது வரி,"Impartiality, thy name is Sankaran" என்று அறிவிப்பதால், முதல் வரி பின்வருமாறு பொருள் ஆகிறது : அவனை  நின

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே - புறநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.     ------புறநானூறு 312. பாடற் குறிப்பு : பாடியவர் : பொன்முடியார். பெண்பாற் புலவராய் அறியப் பெறுகிறார். ஆண்மகனை  வளர்ப்பதில் தம் கடமையையும், தந்தை, சமூகம், அரசன் ஆகியோர்  கடமையையும், இறுதியில் அந்த ஆண்மகனின் கடமையையும் வரிசைப் படுத்துகிறார். தம் கடமை என்று அவர் கூறுவது ஒரு தாயின் கடமைக்கான குறியீடு. பிறந்து, வளர்ந்து, ஒருவன் சிறந்த மனிதனாய் உருவெடுப்பதில் அனைவர் பங்கினையும் எடுத்துக் கூறுவதன் மூலம், உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டான சமூகத்தை முன் வைக்கிறார். பாடலில் கடன் என்பது கடமையைக் குறிக்கும். பாடற் பொருள் : மகனைப் பெற்று, பேணி வளர்த்து, புறவுலகிற்கு அளிப்பது என் தலையாய கடமை. அவனைச் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை (சான்றோன் என்பது, சங்ககாலத்திலும் சங்கமருவிய காலத்திலும், பெரும்பாலும் வீரத்திலும் அறிவுநிலையிலும் என்பர். 'அவையத்து ம

பாரி பாரி என்று பல ஏத்தி - புறநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"   ---- புறநானூறு 134. பாடற் குறிப்பு : பாடியவர் : கபிலர். பாடப்பட்டோன் : பறம்பு நாட்டு மன்னன் வள்ளல் வேள் பாரி. இப்பாடலில் பாரியின் வள்ளன்மையைத் திறம்பட உலகோர்க்கு  உரைக்கிறார் கபிலர். எளிய வரிகளில் வளமான பொருள்   இப்பாடலின் சிறப்பு. பாடற் பொருள் : பாரி பாரி என்று பலவாறு உயர்த்தி, வள்ளன்மைக்குப் பாரி ஒருவனையே செவ்விய மொழி ஆளுமை பெற்ற புலவர் பெருமக்கள் (செந்நாப் புலவர்) புகழ்வர். வள்ளன்மையால்   உலகைக் காக்க (புரப்பது) பாரி ஒருவன் மட்டுமல்லன், மழையும் (மாரியும்) இங்கு உண்டே ! பின் குறிப்பு : உலகில் எடுத்துக்காட்டாய் நிற்கும் நட்புகளில் கபிலர் - பாரி நட்பும் ஒன்று. இப்பாடலில், "பாரி மட்டும்தானா வள்ளல் ? மழையும் தான் உண்டு" என்று பாரியை இகழ்வது போல் தொனிக்கிறது; ஆனால் உண்மையில், பாரியின் வள்ளன்மைக்கு நிகர் மழையே என்று மறைமுகமாகப் புகழ்கிறார். ஆதலின் ஈது 'இகழ்தல் போல் புகழும்' வஞ்சப்புகழ்ச்சியானது.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் ......- புறநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம்  எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.        ----புறநானூறு 112 பாடற் குறிப்பு : பாடியோர் : பாரி மகளிர். மூவேந்தர் சூழ்ச்சியால் மன்னன் பாரி போரில் வெல்லப்பட்டு மாய்ந்தான். அவனது பறம்பு மலையும் அப்பகைவரால் கொள்ளப்பட்டது. பாரி மகளிர் இருவரும் பாரியின் உயிர் நண்பர் புலவர் கபிலரின் பொறுப்பில் இருந்த போது கையறு நிலையில், தந்தையை இழந்து தவிக்கும் தம் நிலைக்கு வருந்திப் பாடுவது; அவலச் சுவை ஏந்தி வரும் பாடல். பாடற் பொருள் : அன்றொரு நாள் அந்த வெண்ணிலா ஒளியில், எம் தந்தை எம்முடன் இருந்தார் ; எமது குன்றும் (பறம்பு மலையும்) பகைவர் கொள்ளவில்லை. இன்றைய தினம் இந்த வெண்ணிலா ஒளியில், வென்று ஒலிக்கும் முரசினைக் (வென்று எறி முரசு) கொண்ட வேந்தர் எம் குன்றையும் கொண்டார்; எம் தந்தையும் இலர் (உயிருடன் இல்லை). பின் குறிப்பு : எளிமையான வரிகளைக் கொண்டு உணர்ச்சி ததும்பும் பாடல். இலக்கிய உலகிலும், பாமர மக்களிடமும் (திரைப்பாடல்களில் கூட இப

அகவன் மகளே ! அகவன் மகளே ! - குறுந்தொகை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "அகவன் மகளே!   அகவன் மகளே! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே! பாடுக பாட்டே; இன்னும் பாடுக பாட்டே! அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!"     -------குறுந்தொகை, பாடல் 23. பாடற் குறிப்பு : பாடியவர் - ஒளவையார். குறிஞ்சி நிலத்தலைவி தலைவனிடம் கொண்ட காதல் ஏக்கத்தில், மெலிதல் போன்ற உடல் மாற்றங்கள் அவளிடம்  ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே தாயும் செவிலித் தாயும் கவலையுற்று, குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் பாடும் அகவலோசைப் பாடல். குறி சொல்பவளை 'அகவன் மகளே!' என விளிக்கிறாள் தோழி. பாடற் பொருள் : அகவன் மகளே ! அகவன் மகளே ! சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் போன்ற  (கோப்பு அன்ன) நல்ல நெடிய கூந்தலையுடைய அகவன் மகளே ! பாடலைப் பாடுக ! இன்னும் பாடலைப் பாடுக ! அவரது நல்ல  நெடுங்குன்றம் பற்றிப் பாடிய பாடலைப் பாடுக ! பின் குறிப்பு : (1) சங்குமணி போல் வெண்மையான கூந்தல் என்றதன் மூலம், குறி சொல்பவள் வயதில் மூத்தவள் என்று அறிகிறோம். (2) தோழியைப் பொறுத்தமட்டி

மாயோன் மேய காடுறை உலகமும் ..........- தொல்காப்பியம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே". - தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5 பாடற் குறிப்பு : ஐவகை நிலங்களில் நான்கு வகை நிலங்களில் ஒவ்வொன்றிலும் தலைவன் அல்லது தெய்வத்தைக்  குறிக்கிறது தொல்காப்பியம். பாலையின் தெய்வம் குறிக்கப்பெறவில்லை. பாலை என்பது தமிழ் கூறும் நல்லுலகில் தனியான வரையறையின்றி, சிலப்பதிகாரக் கூற்றின்படி (காலச் சூழலினால்) குறிஞ்சியும் முல்லையும்                   முறைமையில் திரிந்து, கொற்றவையை வழிபடும் நிலம் எனலாம். பாடற் பொருள் : மாயோனுக்கான காடு சார்ந்த உலகமும், சேயோனுக்கான மேகம் தழுவும் மலைநாடும் (மை - இங்கு மேகத்தைக் குறித்தது; வரை - மலை), வேந்தன் ஆளும் தீம்புனல் பாயும் கழனிகளும், வருணன் உறையும் பெருமணல் நிறைந்த கடற் பகுதியும் இவ்வாறு சொல்லுகிற  முறையே (வரிசையின் படி) முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லப்படும். பின் குறிப்பு: தொன்மையான நாகரிகங்களில்

யாருமில்லை தானே கள்வன் - குறுந்தொகை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : “யாரும் இல்லை; தானே கள்வன்; தானது பொய்ப்பின், யானெவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”     ----------குறுந்தொகை,   பாடல் 25. பாடற் குறிப்பு : பாடியவர் - கபிலர். தலைவன் தன்னைத் திருமணம் செய்யக் காலம் தாழ்த்துவதால், கலக்கமுற்ற தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள். பாடற் பொருள் : அவன் என்னை மணந்த போது (மணந்த ஞான்றே),  அவ்விடத்தில் யாருமில்லை; அக்கள்வன், தான் மட்டுமே இருந்தான் (தானே கள்வன்). அவனே பொய்த்து விட்டால் (தான் அது  பொய்ப்பின்) நான் என்ன செய்ய முடியும்  (யான் எவன் செய்கோ)? தினையின் தாள் போல சிறிய, பசுமையான (tender, not green) கால்களையுடைய நாரையும் (குருகும்) அங்கே உண்டு. அதுவும் ஒழுகுகின்ற நீரோட்டத்தில் ஆரல் மீனைத் தேடிக் கொண்டிருந்தது (அதுவும் எங்களைப் பார்க்கவில்லை). பின்குறிப்பு : (1) மணந்த போது என்பது 'உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிய போது' என்பதற்கான இடக்கரடக்கல். (2) பலவீனமான சாட்சியானது குருகு. அது சாட்சி சொல்லுமா ? அது கூட இவர்களைப் பார்க்கவில்லை. (3) களவியல், 

யாண்டு பலவாக நரையிலவாகுதல் - புறநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல்: "யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதிராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான்  வாழும் ஊரே"       ----புறநானூறு, பாடல்191; பாடியவர் : பிசிராந்தையார். பாடற் குறிப்பு : பிசிராந்தையார் முதுமை வந்தபோதும் சுறுசுறுப்புடனும் இளமைத் தோற்றத்துடனும்  திகழ, அதன் காரணத்தை ஆங்காங்கே மக்கள் வினவ, அவர் முன்வைக்கும் காரணங்களே இப்பாடல். நிறைவான வாழ்வே இளமையின் ரகசியம் என்பதே அவர் விடுக்கும் செய்தி.    பாடற் பொருள் : ஆண்டுகள் பலவானாலும் (வயதானாலும்), தலை  நரை இன்றி  (இளமையொடு இருத்தலுக்கான குறியீடு) எங்ஙனம் உள்ளீர் (யாங்கு ஆகியர்) என்று வினவுவீர்கள் என்றால், "மாட்சிமை பொருந்திய மனைவி ( மாண்டவென் மனைவி) வாய்க்கப் பெற்றேன். என் மக்கள் (பிள்ளைகள்) நிரம்பியவர்கள் (அறிவிலும் பண்பிலும்). என் இளையோர் (என் ஏவல் ஏற்போர் - ஏவலர், இளைய சுற்றத்தினர்) யான் எண்ணியவாறு அமைந்தனர் (கண்டனையர்). வேந்தன் அல்லவை செய்யாது, ந

கேள்விக்கினியை கட்கின்னாயே - புறநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல்: "நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுஆழ் யாக்கை யொடு, கேள்விக்கு இனியை, கட்கு இன்னாயே !"      ------புறநானூறு 167. பாடற் குறிப்பு : பாடியவர் : கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டவர் : ஏனாதி திருக்கிள்ளி. ஏனாதி (சேனாதிபதி) என்பது படைத்தலைவரில் தீரச்செயல் புரிந்தோர்க்கு  மன்னர்கள் அளித்த பட்டம். இவன் சோழ மன்னன் ஒருவனின் படைத்தலைவன். படைத்தலைவர்களும் குறுநில மன்னர்களாய் இருந்த காலமுண்டு. இதன் முழுப்பாடலில் கடுமான் (குதிரைவீரன்) கிள்ளி என்று போற்றப்படுவதால், சோழன் கடுமான் கிள்ளி எனவும் விளங்கப் பெற்றான். பாடற் பொருள் : போரில் எதிரியைக் கண்டு அவர்தம் படை கடந்து (வென்று), படை விலக்கி எதிர் கொள்வதால், வாளினால் வாய்த்த ஆழ்ந்த தழும்புகளோடு (ஆழ் வடு), நீ காண்பதற்கு நன்றாக இல்லை (கட்கு இன்னாயே; கட்கு - கண்ணுக்கு). ஆனால் வீரம் செறிந்த புகழால், செவிக்கு இன்பம் சேர்க்கிறாய் ! (கேள்விக்கு இனியை!). பின் குறிப்பு : (1) அவன் காட்சிக்கு நன்றாக இல்லை எனச் சொல்லும் போது, அவனை இகழ்வது போன்ற தோ

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் - குறுந்தொகை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்  றொண்ணுதன் முகனே"     --------குறுந்தொகை, பாடல் 167. பாடியவர்: கூடலூர் கிழார். பாடற் களம் : சீராட்டி செல்லமாக வளர்க்கப்பட்ட தலைவி திருமணமாகி கணவன் வீடு சென்றபின், எப்படி சமையல் செய்தாளோ என்று தாய் கவலை கொள்கிறாள்.  செவிலித்தாய் (Foster mother) பெண்ணின் வீடு சென்று மகளைப் பார்த்து வருகிறாள். தலைவி சமையல் செய்த பாங்கினில் தலைவன் சுவைத்து உண்டு அவளைப் பாராட்டியதையும், தலைவி அகமகிழ்ந்த நிலையையும் தாய்க்கு செவிலித்தாய் எடுத்தியம்புவதாய் வருகிறது பாடல். பாடற் பொருள் : சற்றே புளித்த, முற்றிய தயிரை (முளிதயிர்) தனது காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்து, அவ்விரல்களைத் தன் சேலைத் (கலிங்கம்) தலைப்பால் துடைத்துக் (கழுவுறு) கொண்டாள் தலைவி (தலைவனுக்கு சோறு ஆக்குவதில் அவ்வளவு அவசரம்!). அத்துணியைக் கழுவி சுத்தம் கூடச் செய்யாமல் (கழாது), அத்தயிரைத் தாளிதம் செய்தாள். அதன

தேனுக்கள் இன்பம்........-திருமூலர்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"    --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான  எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த  ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான்.  அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான  இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம். பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில்

ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம் - புறநானூறு - ஔவை - அதியமான்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : பலநாளும் தலைநாளும் "ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன்......."     ‌‌ --------புறநானூறு பாடல் 101. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப் பட்டுள்ளது) பாடற் குறிப்பு: பாடியவர் ஒளவையார்; பாடப்பட்டவர்  கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சி. இப்பாடலில்  அதியமானின் விருந்தோம்பல், விருந்தருமை ஒளவையால்  போற்றப்படுகிறது. பாடற் பொருள் : ஒருநாள் சென்றோம்‌ இருநாள் சென்றோம் என்றில்லை; பல நாட்கள் இருந்து பழகி, பலரொடு சென்றிருந்தாலும், முதல்முறை போலவே எம்முறையும்  விருப்பத்துடன் அன்பு பாராட்டிப் பேண வல்லவன். பின் குறிப்பு : இக்காலத்தைப் போல் நெடிய பயண வசதி இல்லாமையால், அக்காலத்தில் விருந்தோம்பல் சமூகத்தில் தேவையான அங்கமானது. எனவே அது அறமாகக் கொள்ளப்பட்டது  ஒருபுறம். இங்கு வந்தவர் சான்றாண்மை மிக்கவர். வரவேற்பவன் மன்னன். எனவே விருந்தோம்பல் எனும் அறத்திற்கும் மேலாக அன்னார்க்கு உரிய சிறப்புச் செய்தலும் ஈண்டு விருந்தோம்பலின் அங்கமானது. Not just treating a Guest, it's treating a Gues

அலியார் - பாத்திமா திருமணம் ---- சீறாப்புராணம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "பன்னரும் அலியார்க்கு இன்பப் பாத்திமா தமை நிக்காகு முன்னிய தரு தூபாவின் முடித்தனன் இறைவனன்றே" - -----சீறாப்புராணம், பாத்திமா திருமணப் படலம், பாடல் 3072. பாடற் குறிப்பு : நபிகள் நாயகத்தின்  திருப்புதல்வியார் பாத்திமாவின் திருமணச் சிறப்பினை இப்பாடலில் கூறுகிறார் உமறுப்புலவர். பாடற் பொருள் : சொல்லரும் புகழுடைய அலியார்க்கும் மகிழ்ச்சியின் வடிவான பாத்திமா தமக்கும்,  தூபா எனும் புனித மரத்தின் கீழ் இறைவனே நிக்காஹ் எனும் சிறப்பை நிகழ்த்தினார். பின் குறிப்பு : மானிடரின் மங்கல நிகழ்வான திருமணத்தை இறை நிலையிலும் நிகழ்த்தி மகிழும் வழக்கம் பல்வேறு சமயங்களிலும் உண்டென அறிவோம். "பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே" என்று சம்பந்தர் காணும் திருக்கல்யாணமும், "மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் !" என்று ஆண்டாள் நாச்சியார் காணும் கனாவும் நாம் கொண்டாடி மகிழ்பவையே.

'சாகத் துணியில்' - மாயாவாதத்திற்கு எதிரான பாரதியின் பாடல்

*தினம் ஒரு தமிழ்ப் பாடல்* சாகத் துணியில் சமுத்திரம் எம் மட்டு மாயையே இந்தத் தேகம் பொய் என்றுணர் தீரரை என் செய்வாய் மாயையே ----------------பாரதியார். பாடற் குறிப்பு : மேம்போக்காக எளிய பாடலாய்த் தெரிந்தாலும், தத்துவார்த்தமான (philosophical) பாடல். 'மாயாவாதம்' என்பது ஒரு தத்துவார்த்த நிலைப்பாடு. பெரும்பான்மையான புரட்சியாளர்கள் (இராமானுசர், பாரதி போன்றோர்) அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். பாமர நோக்கில் சொல்வதானால், மாயாவாதம் மானிட  சிந்தனையைத் தடுப்பது, மனித மனதைக் குழப்புவது என்பது எதிர்வாதம்.  மாயாவாதத்தை 'மாயை' என்று குறியீடாகச் சொல்லி இப்பாடலில் சாடுகிறார் பாரதி. பாடற் பொருள் : ஏ மாயையே ! சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் எம்மாத்திரம் ? இந்த தேகம் பொய் என உணர்ந்த (மீண்டும், உயிரைத்  துச்சம் எனத் துணிந்த) தீரரை உன்னால் என்ன செய்ய முடியும் ? பின் குறிப்பு : பாரதியின் 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' பாடலும் மாயாவாதத்தைச் சாடுவது.  'நீங்களெல்லாம் தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதுவே ! நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ?' என்றெல

தேம்பாவணி - இயேசுகுமாரனின் பண்பையும் பணியையும் வளனார் எடுத்தியம்புவது

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும், தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும், வீ ஒக்கும் வடிவத்தால்; வியன் தயையால் கடல் ஒக்கும், தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும் அத்திருவோன்.    --------தேம்பாவணி; பாடல் 3376. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப் பட்டுள்ளது; வரி முடியும் இடத்து காற்புள்ளி தரப்பட்டுள்ளது) பாடற் களம் : இயேசுகுமாரனின் பண்பையும் பணியையும் வளனார் (ஜோசஃப் பெருமகனார்) எடுத்தியம்புகிறார். அவர்தம் திருக்குமாரனைப் பற்றிய கூற்று உரிமையுடன் ஒருமையில் அமைப்பது  பொருந்தி அமையும். பாடற் பொருள் : நோயுற்றுத் துன்பம் அடைந்தோர்க்கு இன்பம் தரும் உயிர் மருந்துக்கு ஒப்பாவான். நெருப்பைப் போன்ற பாவச்செயல் புரிந்தோர்க்கு (புரையார்க்கு), அப்பாவங்கள் போக்குவதில் குளிர்ச்சி(சீதம்) பொருந்திய மழைக்கு (புயல்) ஒப்பாவான். தன் மனதின் இயல்பால் (வடிவத்தால்) மலருக்கு (வீ எனப்பட்டது) ஒப்பாவான். பரந்த(வியன்) கருணை(தயை) உள்ளத்தால் கடலுக்கு ஒப்பாவான். அத்திருக்குமாரன் உலகோர் அனைவருக்கும்(சகத்து எங்கும்) தாய்க்கும் தந்தை(தாதை)க்கு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு"     -------பெரியாழ்வார். பாடற் குறிப்பு: நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ்வார் பாசுரங்களில் ஆரம்பமாகிறது. அதிலும் முதல் பன்னிரண்டு பாடல்கள் 'திருப்பல்லாண்டு' எனும் தொகுதியில் உள்ளன. அதிலும் முதற் பாடலே இன்று நம் தேர்வு. எனவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலேயே முதல் பாடல் இது. 'பல்லாயிரத்தாண்டு வாழ்க' எனத் தம் இறைவனுக்கே வாழ்த்துப் பாடியமையாலேயே அவர் பெரியாழ்வார் என்பர். பாடற் பொருள் : பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழிய (பெருமாளே) ! மல்லர்களை (கம்சன் அனுப்பிய மல்யுத்த வீரர்களை) வென்ற திண்தோள் படைத்த மணிவண்ணனே (நீலமணி நிறத்தவனே) ! உன் செம்மையான திருவடியே எமக்குச்  சிறந்த பாதுகாப்பு. பின் குறிப்பு : தமக்குக் குருவானவருக்கு  என்றோ ஏற்பட்ட ஐயத்தைத் தீர்த்து அவருக்கே ஒரு நாள் குருவாகும் குழந்தைத்தனமான ஆசை ஏற்பட்ட மாணவனைப் போல், தம்மை எப்போதும் வாழ்த்தும் (ஆசியருளும்) தம் இறைவனு

சிங்கப்பூர் சந்துரு கேள்வியும் என் பதிலும் - 2

சந்துரு கேள்வி: நாவுக்கரசர் காலம் வரை கூட (7 ம் நூற்றாண்டு) தமிழ்ச் சமூகத்தில் நான்கு வர்ண சாதியம் தலைதூக்காததால்* இதில் மற்றுமொரு விளக்கம் வேண்டுகிறேன். புறநானூற்றின் காலம் கி.பி 4-ம் நூற்றாண்டுவரைதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புறநானூற்றில் "வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே," என்று பாடல் உள்ளது. அப்படியெனில் சங்ககாலத்தில் சாதிகள் இருந்தவனா? என் பதில் : (1) ஆரிய வரவு முன்பே நிகழ்ந்தமையால், நாவுக்கரசர் காலத்தில் நான்கு வர்ணம் அறியப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அது வேர்பிடித்தது சோழர் காலத்தில்தான் இருக்க வேண்டும். குறிப்பாக கல்வெட்டுச் சான்றுகளின்படி மனுநீதி அரசநெறியானது  இராசராச சோழன் காலத்தில். ஆகவேதான் சமீப காலமாக ஆரியப் பிராமணர் அவனைக் கொண்டாடுவதைக் காணலாம். (2) தொல்காப்பிய காலமான கடைச்சங்க காலத்தில் அந்தணர், அரசன், வணிகர், வேளாளர் என்ற பாகுபாடு இருந்தது தொல்காப்பியத்தின் மூலம் தெளிவு. இது வர்ண சாதிப் பாகுபாடு அல்ல. (3) தமிழ்ச் சமூகத்தில் அந்தணர் என்போர் அறவோர் என்ற நிலையே இருந்திர

கண்ணகி, சீதை, குடும்ப விளக்கு விருந்தோம்பல்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்  துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை..."  -------------சிலப்பதிகாரம்,  கொலைக்களக் காதை, வரிகள் 71-73. பாடற் களம் : மதுரை ஆயர்பாடியில் மாதரியிடம்  கோவலனும் கண்ணகியும்  அடைக்கலமான பின்னர், தன் தவறுகள் நினைந்து தன் நிலைக்கு வருந்துகிறான். ஆண்மகனுக்கே உரிய முறையில், கையறு நிலையில் இல்லாளையே கடிந்து கொள்கிறான், "எழுகென எழுந்தாய். என் செய்தனை" என்று. அஃதாவது, "புறப்படு எனச் (எழுகென - எழுக  என) சொன்னதும், என்னைத் தடுக்காமல் புறப்பட்டு விட்டாய் (எழுந்தாய்) ! என்ன காரியம் செய்து விட்டாய் (என் செய்தனை) ?" அப்போது தன்னிலை விளக்கம் தருகிறாள் கண்ணகி. அவ்விளக்கத்தின் முதல் மூன்று வரிகளே இன்றைய பாடற் பகுதி. அதில் அவன் பிரிந்த காலத்தில் அவள் இழந்த நல்வினைகளை அடுக்குகிறாள். பாடற் பொருள் : அறவோர்க்கு ஈதலும், அந்தணரைப் பேணுதலும், துறவியரை எதிர் சென்று வணங்குதலும், நம் முன்னோர் சிறப்பாக வரையறுத்த வழியில் விருந்தினரை எதிர்சென்று கொள்ளலும் (வரவேற்றலும்) நீ இல்லாமையா

குரவர் பணி அன்றியும்.......சிலம்பு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "குரவர்பணி அன்றியும் குலப்பிறப் பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என்பிழைப் பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி"    ------சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை, வரிகள் 89-92. பாடற் களம் : புகார் நகர் நீங்கி, கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனிடம் கௌசிகன், மாதவி விடுத்த மடலைத் தருகிறான். அம்மடலில் மாதவி கோவலனைப் பிரிந்து மருகுகிறாள். பாடற் பொருள் : முதுகுரவராகிய தாய்- தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்ததோடு மட்டுமல்லாமல், குலமகளான கண்ணகியுடன் இரவோடு இரவாக ஊரைவிட்டுச் செல்லும்  அளவிற்கு நான் செய்த பிழை யாது என அறியாது என் மனம் கையறு நிலையில் வருந்துகிறது. அவ்வருத்தத்தைத்  தாங்கள் போக்க வேண்டும். குற்றமற்ற காட்சிகளையே உடைய மேன்மையுடையவரே, போற்றி ! பின் குறிப்பு : கதையோட்டத்தில், தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, போகிற போக்கில் மாதவி வாயிலாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்வது, மண்ணின் மரபு கூறும் பாங்கு; மனித மாண்பின் வெளிப்பாடு. ஒரு சமூகத்தில் ஒரு தார மணமுறை (monogamy) அல்லது பலத

சிங்கப்பூர் சந்துரு கேள்வியும் என் பதிலும் - 1

சந்துரு கேள்வி :  ஐயா. உங்களிடம் இரு கேள்விகள். 1. பெளத்தம் தமிழை அழித்து சமஸ்கிருதம் வளர்க்க முயற்சி செய்ததா? 2. சமண மதத்தில் சாதிகள் இருந்தனவா? ஆழ்வார்களும். நாயன்மார்களும் இல்லாவிட்டால் தமிழ் அழிந்திருக்கும் என  சிலர் சொன்னார்கள். ஆனால் அவர்கள் நான்கு குலத்தையும் ஏற்றுக்கொண்டதால்தான் (உதா. குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் என்ற ஆழ்வார் பாடல்) கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள், அதனால்தான் பிராமணர்கள் வலுப்பெற்றார்கள், அவர்களின் வர்ணாசிரமும் வலுப்பெற்றது என்றும் படித்தேன். பக்தி இலக்கியம் காலம் மட்டும் இல்லாமலிருந்தால், இன்று சாதி என்ற ஒன்றே இருந்திருக்காது என்றும் படித்தேன். ஒரே குழப்பமாக உள்ளது. உங்களின் வாசிப்பு விரிவுபட்டது என்பதால் தெளிய வைப்பீர்கள் என்று நம்புகிறேன். 🙂🙏🏽 என் பதில்: (அ) சமணம் தமிழகத்தில் இரு வகைப்படும் என்பர். தமிழ்ச் சமணம், வட சமணம் என்பன. தமிழ்ச் சமணமும் ஆசீவகமும் சம காலத்தவை. இளங்கோவடிகள் காலத்தது தமிழ்ச் சமணம் (சுமார் 2 ம் நூற்றாண்டு); நாவுக்கரசர் காலத்தது பல்லவர் காலத்தில் வந்த வட சமணம். (ஆ) பாலி, மைதிலி போன்ற மொழிகளின் கலப்பாக வேத ப

வருவையாகிய சின்னாள், செல்லாமை உண்டேல் - நற்றிணை, குறள்

தினம் ஒரு தமிழ்ப் பாடல். "வருவை யாகிய சின்னாள் வாழாளாதல் நற்க றிந்தனை சென்மே"      ----நற்றிணை 19 வது  பாடல் ஈற்றடிகள். பொருள் கருதி சீர் பிரித்து : "வருவை ஆகிய சிலநாள் வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே". பாடற் களம்:- தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன், சில நாட்களில் திரும்பி வருவதாக அவளைத் தேற்றி, செல்ல முற்படுகிறான். தலைவியின் தோழி தலைவனிடம் தலைவிதன் நிலை பற்றி எடுத்துரைக்கிறாள். பாடற் பொருள்:- நீ மீண்டும் வருகிற அந்த சில நாட்கள் கூட (பிரிவாற்றாமையால்) தலைவி வாழ மாட்டாள் என்பதை நன்கு அறிந்து செல்வாயாக ! பின் குறிப்பு :- பிரிவாற்றாமையினால் தலைவி உடல்நலனும் மனநலனும் அழிதல் பொதுவாக இலக்கியங்களில் பேசப்படும் ஒன்று. உயிர் வாழாள் என்பது அருகியே வருவது. வள்ளுவத்தில் அதிகாரம்  'பிரிவாற்றாமை' யில் "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" என  வரும் முதற் குறள் நமது நற்றிணைப் பாடலுடன் நோக்கற்பாலது. (எனக்குரை - எனக்கு உரை ; வாழ்வார்க்குரை - வாழ்வார்க்கு உரை) பிரிந்து செல்லும் தலைவன் சிலநாள்தானே பிரிவு என்றெல்லா

உண்டால் அம்ம இவ்வுலகம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல். உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்  அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி; புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,  உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !        ----புறநானூறு 182. (பொருள் கருதி சீர் பிரித்து எழுதப் பட்டுள்ளது) பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார். பாடற்பொருள் :- " இவ்வுலகம்  உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்)  எனத் தொடங்குகிறது பாடல்.  இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார். அவையாவன : இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்;  பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம்                             மேற்கொண்ட பணி