கண்ணகி, சீதை, குடும்ப விளக்கு விருந்தோம்பல்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                         - சுப.சோமசுந்தரம்

"அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
 துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை..."
 -------------சிலப்பதிகாரம்,  கொலைக்களக் காதை, வரிகள் 71-73.

பாடற் களம் :
மதுரை ஆயர்பாடியில் மாதரியிடம்  கோவலனும் கண்ணகியும்  அடைக்கலமான பின்னர், தன் தவறுகள் நினைந்து தன் நிலைக்கு வருந்துகிறான். ஆண்மகனுக்கே உரிய முறையில், கையறு நிலையில் இல்லாளையே கடிந்து கொள்கிறான், "எழுகென எழுந்தாய். என் செய்தனை" என்று. அஃதாவது, "புறப்படு எனச் (எழுகென - எழுக  என) சொன்னதும், என்னைத் தடுக்காமல் புறப்பட்டு விட்டாய் (எழுந்தாய்) ! என்ன காரியம் செய்து விட்டாய் (என் செய்தனை) ?" அப்போது தன்னிலை விளக்கம் தருகிறாள் கண்ணகி. அவ்விளக்கத்தின் முதல் மூன்று வரிகளே இன்றைய பாடற் பகுதி. அதில் அவன் பிரிந்த காலத்தில் அவள் இழந்த நல்வினைகளை அடுக்குகிறாள்.

பாடற் பொருள் :
அறவோர்க்கு ஈதலும், அந்தணரைப் பேணுதலும், துறவியரை எதிர் சென்று வணங்குதலும், நம் முன்னோர் சிறப்பாக வரையறுத்த வழியில் விருந்தினரை எதிர்சென்று கொள்ளலும் (வரவேற்றலும்) நீ இல்லாமையால் நான் இழந்தவை.

பின் குறிப்பு :
கண்ணகியின் இழப்பில் தலையாயதாய் விருந்தோம்பல் முதலிய நன்னெறிகள்  வழுவியமையைக் கூறுவதன் மூலம், இளங்கோவடிகள் கதைப் போக்கில்  மண்ணின் மாண்புகளை எடுத்துரைத்தார். இது புலவர் தொழிலின் சிறப்பு. கம்பன் மட்டும்  இளைத்தவனா என்ன ? சுந்தர காண்டம் காட்சிப் படலத்தில் அசோக வனத்தில் அனுமனிடம் சீதை, தானில்லாமல் இராமன் விருந்தோம்பலுக்காக என்ன பாடு படுவானோ என  விம்முகிறாள்.
"விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்" (பாடல் 5190, வரி 2). கம்பன் கண்ட சீதை தமிழ்ச் சீதை ! ஏனெனில்,
"நற்றமிழ் சேர்ந்த புகழ்
ஞாலத்தில் என்ன வெனில்
உற்ற விருந்தை
உயிரென பெற்று உவத்தல்" (குடும்ப விளக்கு) எனும் பாரதிதாசன் கூற்றின் வழி, விருந்தோம்பல் தமிழர் மாண்பு என அறிவோமே !

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்