நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
- சுப.சோமசுந்தரம்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
--------புறநானூறு 187.
பாடற் குறிப்பு :
பாடியவர் : ஒளவையார்.
நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ, அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ எனப் பிரித்தல் வேண்டும். வீட்டிற்குப் பெண்ணும், நாட்டிற்கு ஆணும் என சமூகம் அமைந்த காலகட்டத்தில், ஆடவர் ஒழுக்கமே உலக மேன்மைக்கு அடிப்படை எனப் பகர்வது இச்செய்யுள். ஆடவர் என்பதை மக்கள் எனவும், நல்லவர் என்பதை கடமையுணர்வு கொண்டோர் எனவும் பொருள் கூறுவார் உண்டு. ஆடவர் என்பதை ஆள்வோர் எனப் பொருள் கொள்வாரும் உண்டு.
பாடற் பொருள் :
நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) - பள்ளமாக - இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே !
பின் குறிப்பு :
நாடு என்பது மருதம், காடு என்பது முல்லை, அவல் (பள்ளம்) என்பது நெய்தல், மிசை (மேடு) என்பது குறிஞ்சி என நால்வகை நிலங்களும் குறிக்கப்பெற்றன. பொதுவாக நிலத்தின் தன்மைக்கேற்ப மக்கட்பண்பு அமைவது வழக்கம். எடுத்துக்காட்டாக, பள்ளத்தில் வாழ்வார்க்கு நீர்வளம் வாய்த்தலாற் பொருள் வளம் உண்டாதலின், ஈதல் திறம் பெருகும்; மேட்டு நிலத்தார்க்குப் பொருட் சிக்கனம் கைகூடும்; வன்முறைக்கு மக்கள் ஆளாகும் நிலத்தில்/காலத்தில் வீரம் விளையும். மாறுதலாக இங்கு மக்கட்பண்பினால், குறிப்பாக ஆடவர் பண்பினால், நிலத்தின் பண்பு/சிறப்பு அமைவது பாடுபொருளானது.
நன்றி!! அருமையான பதிவு....
ReplyDelete