'சாகத் துணியில்' - மாயாவாதத்திற்கு எதிரான பாரதியின் பாடல்

தினம் ஒரு தமிழ்ப் பாடல்
                         - சுப.சோமசுந்தரம் 

"சாகத் துணியில் சமுத்திரம் எம் மட்டு
மாயையே
இந்தத் தேகம் பொய்
என்றுணர் தீரரை என் செய்வாய் மாயையே"
----------------பாரதியார்.

பாடற் குறிப்பு :
மேம்போக்காக எளிய பாடலாய்த் தெரிந்தாலும், தத்துவார்த்தமான (philosophical) பாடல்.
'மாயாவாதம்' என்பது ஒரு தத்துவார்த்த நிலைப்பாடு. பெரும்பான்மையான புரட்சியாளர்கள் (இராமானுசர், பாரதி போன்றோர்) அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். பாமர நோக்கில் சொல்வதானால், மாயாவாதம் மானிட  சிந்தனையைத் தடுப்பது, மனித மனதைக் குழப்புவது என்பது எதிர்வாதம்.  மாயாவாதத்தை 'மாயை' என்று குறியீடாகச் சொல்லி இப்பாடலில் சாடுகிறார் பாரதி.

பாடற் பொருள் :
ஏ மாயையே ! சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் எம்மாத்திரம் ? இந்த தேகம் பொய் என உணர்ந்த (மீண்டும், உயிரைத்  துச்சம் எனத் துணிந்த) தீரரை உன்னால் என்ன செய்ய முடியும் ?

பின் குறிப்பு :
பாரதியின் 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' பாடலும் மாயாவாதத்தைச் சாடுவது.  'நீங்களெல்லாம் தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதுவே ! நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ?' என்றெல்லாம் அவன் கேட்பது குறிக்கத்தக்கது. பாடற் பொருளை உள்ளவாறு உரைத்தேன். அவ்வளவே. தத்துவார்த்த ஆழ்நிலையில் சென்று பேச அத்துறையில் எனது அறிவு நிலையும் அவ்வளவே. பாரதி கவிஞன் மட்டுமல்ல, தத்துவ ஞானமும் கொண்டவன். கற்றுணர்ந்தவன்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்