தேனுக்கள் இன்பம்........-திருமூலர்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                        - சுப.சோமசுந்தரம்

"தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"
   --------------திருமந்திரம் பாடல் 3065.

பாடற் குறிப்பு :
புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான  எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்....

பாடற் பொருள் :
தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த  ஊனுடம்புக்குள்ளேயே ஈசன் ஒளிந்துள்ளான்.  அஃதாவது அழிந்து போகும் மனிதனுக்குள்தான் (அல்லது எந்த ஜீவனுக்குள்ளும்) அழியாப் பரம்பொருளான  இறைவன் ஒன்றறக் கலந்துள்ளான்; எனவே அங்கே தேடு என்பதே பொருள். சீவனில் சிவத்தைத் தேடு, Love thy neighbour, அன்பே சிவம் என்று பலவாறு சொல்லிக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : மெய்யெண்கள் கணத்தை (set of real numbers), (0,1) என்ற இடைவெளியில் (interval) இருவழிக் கோப்பின் (bijective map) மூலமாகப் பொருத்திய பின், என் கணிதப் பேராசிரியர் இத்திருமந்திரப் பாடலைச் சுட்டியது நினைவில் நிழலாடுகிறது. எல்லையில்லாத இறைவன்  எல்லையுள்ள மனிதனில் அடக்கம் - மெய்யெண் கணம் (0,1) என்ற இடைவெளியில் அடங்கியதைப் போல். எண் படித்தாலே எழுத்தும் வரும் போல.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்