மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி

தினம் ஒரு தமிழ்ப் பாடல் :

"மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்"
-----நாச்சியார் திருமொழி, வாரணம் ஆயிரம், பாடல் 6.

பாடற் குறிப்பு :
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கண்ணனைத் தன் தலைவனாய் மனதில் வரிந்து உருகிய இறைநிலைக் காதலே பாடு பொருளானது. அதில் 'வாரணம் ஆயிரம்' எனும் ஆறாம் திருமொழியில், இவர்களது திருமணக் கோலாகலம் ஆண்டாள் நாச்சியாரின் கற்பனையில் விரிகிறது. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பமாகும் 'வாரணம் ஆயிரம்' இந்த ஆறாம் பாடலில், நாயகன் நாயகியின் கரம் பற்றும் அந்த சரியான தருணத்தைப் படம் பிடிக்கிறது.

பாடற் பொருள் :
மத்தளங்கள் கொட்டுகின்றன; வரிசங்குகள் (சங்குகளில் ஒரு வகை - வரிகள் உள்ளவை) முழங்குகின்றன; முத்துக்கள் உடைய மாலைகள் (தாமம்) வரிசையாய் (நிரை), நீளமாய்த் தொங்கும் அளவு கட்டப்பட்ட  (தாழ்ந்த) பந்தலின் கீழ், மைத்துனன் (அப்போது தன் தலைவனைத் தலைவி குறிக்கும் முறை) நம்பி மதுசூதனன் வந்து என் கரம் (கைத்தலம் - கை+தலம்) பற்றுவதாய் நான் கனாக் கண்டேன் (கற்பனை கொண்டேன்), தோழீ !

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

படமாடக் கோயில் ... - திருமூலர்