ஒரே பாடலில் இசுலாத்தின் ஐந்து கடமைகளும் - சீறாப்புராணம்


தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                      - சுப.சோமசுந்தரம்

"தீதுஇலா மறை பொருளாய் திகழ் ஒளியாய்  நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன்,
தூதராய் உமையிருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும்,
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும்".

--------சீறாப்பராணம், இசிறத்துக் காண்டம், உலுமாம்  ஈமான் கொண்ட படலம், பாடல் 5, (4682), வரிகள் 2 - 4.

பாடற் குறிப்பு :
உலுமாம் ஈமான் அவர்கள் கூறுவதாய்  வருவது. ஒரே பாடலில் இசுலாத்தின் ஐந்து கடமைகளையும் சொல்வது.

பாடற் பொருள் :
நன்மையே ஓதும் (தீமை இலா) மறை பொருளாகவும், எவ்விடத்தும் திகழும் ஒளியாகவும் நிறைந்த அல்லா, இப்பூவிலகில் தம் தூதராக உம்மை (மகம்மது நபிகள் நாயகத்தை) அனுப்பி, மாந்தர்க்கான ஐந்து கடமைகளையும் (பறுல்) இறைச்செய்தியாகப் பணித்தார் (கழறும்). அவையாவன : ஐந்து வேளையும் தொழுகை, இறையன்புடன் (காதலுடன்) கலிமா, ஈகை (சக்காத்து), நோன்பு (ரமலான் நோன்பு), மக்காவுக்கான புனிதப் பயணம் (கச்சு - ஹஜ்).

பின் குறிப்பு :
இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து கடமைகள் கலிமா, தொழுகை, நோன்பு, ஈகை, ஹஜ் என வரிசைப்படுத்தப் படும். இலக்கியத்தில் பாடல் ஓசை/இலக்கணம் கருதி மாறி அமைந்தன. கலிமா என்பது 'அவனே ஏக இறைவன்' என உணர்ந்து ஓதும் கடமை. தொழுகைக்கான ஐந்து வேளைகள் : இரவு (Isha - I), அதிகாலை (Subuhu - S), நண்பகல் (Luhar - L), மாலை (Asar - A), அந்திவேளை - கருக்கல் (Mahreef - M). ஆங்கிலத்தில் இந்த முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் ISLAM என வருவது தற்செயல் நிகழ்வு. இஸ்லாத்தில் தொழுகையின் சிறப்பிற்கு இதனை மேற்கோளாய்ச் சொல்லலாம்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்