மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் - அகநானூறு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                      - சுப.சோமசுந்தரம்

"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்"
-----அகநானூறு, பாடல் 4, வரிகள் 10-12.

பாடற் குறிப்பு :
பாடியவர் : குறுங்குடி மருதனார்.
கார்காலத்தில் போர்கள் நின்று விடும். எனவே போர் மேற்கொண்ட வீரர்களும், வாணிகத்தின் பொருட்டு வெளியூர் சென்றோரும் இல்லம் திரும்புவர். கார் சூழ்ந்த பின்பும் தலைவன் வரவில்லையே என ஏங்குகிறாள் தலைவி. "அவன் உன்னைப் பிரிந்து வாடுவதைப் போல், உன் ஏக்கமும் அறிவான். விலங்கினமும் புள்ளினமும் (பறவையினமும்) இணைபிரிந்தால் படும் துயரைக் கூட உணர்ந்தவன் அவன். எனவே விரைவில் வந்துவிடுவான்" என்று தோழி தலைவியைத் தேற்றும் பாடல். அப்பாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள் இவை.

பாடற் பொருள் :
பூத்த சோலையில் (பொங்கர்) துணையோடு இணைந்த, மலரின் மகரந்தத்தை (தாது) உண்ணும் வண்டு (பறவை) கலக்கமுறும் (பேதுறல்) என அஞ்சி, தேரின் மணியில் உள்ள நாவினைக் கட்டி வைத்த (ஆர்த்த), மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட தலைவன் அவன் (இங்கு தேரினையுடையவன் எனச் சுட்டப் பெறுகிறான்). அஃதாவது "வண்டின் பிரிவுத் துன்பத்தையே பொறாதவன், உன் துன்பத்தை எங்ஙனம் பொறுப்பான் ? எனவே  விரைந்து வருவான்" என்பது உட்பொருள்.

பின் குறிப்பு :
நினைவில் நிற்கும் இலக்கியத் தொடர்களில் 'மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்' என்பதுவும் ஒன்று. நான் வடநாட்டில் படிக்கும் காலத்தின் நிகழ்வு ஒன்று குறிக்கத்தக்கது. கல்லூரி விடுதியில் நாய்கள் தொல்லை அதிகம். இரண்டு நாய்கள் இணைந்த நேரம் (அதற்குரிய காலமாயிருக்கலாம்) வடநாட்டு நண்பர் ஒருவர் கம்பை எடுத்து விரட்டினார். எனது தமிழ் நண்பர் ஒருவர் வேண்டாமே எனத் தடுத்தார். நான் உடனே தமிழ் நண்பரைப் பார்த்து, 'மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்' என்றேன். இரு நண்பர்களுக்கும் புரியவில்லை. ஆங்கிலத்தில் விளக்கினேன். வடநாட்டு நண்பர் அசந்து விட்டார். "இரண்டாயிரம் வருடம் முன்பே இத்துணைத் தலைசிறந்த நாகரிகமா?" என்றவர், அடுத்த பிறவியில் தமிழ் மண்ணில் தாம் பிறக்கப் போவதாக எனக்கு வாக்குறுதி தந்தார்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி