பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                         - சுப.சோமசுந்தரம்

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு"
    -------பெரியாழ்வார்.

பாடற் குறிப்பு:
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பெரியாழ்வார் பாசுரங்களில் ஆரம்பமாகிறது. அதிலும் முதல் பன்னிரண்டு பாடல்கள் 'திருப்பல்லாண்டு' எனும் தொகுதியில் உள்ளன. அதிலும் முதற் பாடலே இன்று நம் தேர்வு. எனவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலேயே முதல் பாடல் இது. 'பல்லாயிரத்தாண்டு வாழ்க' எனத் தம் இறைவனுக்கே வாழ்த்துப் பாடியமையாலேயே அவர் பெரியாழ்வார் என்பர்.

பாடற் பொருள் :
பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழிய (பெருமாளே) ! மல்லர்களை (கம்சன் அனுப்பிய மல்யுத்த வீரர்களை) வென்ற திண்தோள் படைத்த மணிவண்ணனே (நீலமணி நிறத்தவனே) ! உன் செம்மையான திருவடியே எமக்குச்  சிறந்த பாதுகாப்பு.

பின் குறிப்பு :
தமக்குக் குருவானவருக்கு  என்றோ ஏற்பட்ட ஐயத்தைத் தீர்த்து அவருக்கே ஒரு நாள் குருவாகும் குழந்தைத்தனமான ஆசை ஏற்பட்ட மாணவனைப் போல், தம்மை எப்போதும் வாழ்த்தும் (ஆசியருளும்) தம் இறைவனுக்கு மேனின்று ஒரு கணம் அவனை வாழ்த்தும் குழந்தைமை அவனடியவர்க்கு ஏற்படக் கூடாதா, என்ன ? அந்த ஆசையை ஒரு கணம் நிறைவேற்றிக் கொண்ட பெரியாழ்வார், மறுகணமே அவனது திருவடியில் வீழ்ந்து பாதுகாப்புக் கேட்டு அடைக்கலமாகிறார். பக்தன் தன் இறைவனிடம் கொண்ட ஆத்மார்த்த  நெருக்கத்தில் பல நிலைகளில் அவனை வழிபடுதல் புதியதா, என்ன ? இறைவனை சுந்தரர் எப்போதும் நண்பனாகவும், மணிவாசகர் அவ்வப்போது நண்பனாகவும், ஆண்டாள் நாச்சியார் அவனையே மணவாளனாகவும் மனதில் வரிந்து கொண்டதை  மீண்டும் மீண்டும் படித்து இன்புற்றோமே !

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்