சிங்கப்பூர் சந்துரு கேள்வியும் என் பதிலும் - 2

சந்துரு கேள்வி:
நாவுக்கரசர் காலம் வரை கூட (7 ம் நூற்றாண்டு) தமிழ்ச் சமூகத்தில் நான்கு வர்ண சாதியம் தலைதூக்காததால்*
இதில் மற்றுமொரு விளக்கம் வேண்டுகிறேன்.
புறநானூற்றின் காலம் கி.பி 4-ம் நூற்றாண்டுவரைதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புறநானூற்றில்
"வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே," என்று பாடல் உள்ளது. அப்படியெனில் சங்ககாலத்தில் சாதிகள் இருந்தவனா?

என் பதில் :
(1) ஆரிய வரவு முன்பே நிகழ்ந்தமையால், நாவுக்கரசர் காலத்தில் நான்கு வர்ணம் அறியப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அது வேர்பிடித்தது சோழர் காலத்தில்தான் இருக்க வேண்டும். குறிப்பாக கல்வெட்டுச் சான்றுகளின்படி மனுநீதி அரசநெறியானது  இராசராச சோழன் காலத்தில். ஆகவேதான் சமீப காலமாக ஆரியப் பிராமணர் அவனைக் கொண்டாடுவதைக் காணலாம்.
(2) தொல்காப்பிய காலமான கடைச்சங்க காலத்தில் அந்தணர், அரசன், வணிகர், வேளாளர் என்ற பாகுபாடு இருந்தது தொல்காப்பியத்தின் மூலம் தெளிவு. இது வர்ண சாதிப் பாகுபாடு அல்ல.
(3) தமிழ்ச் சமூகத்தில் அந்தணர் என்போர் அறவோர் என்ற நிலையே இருந்திருக்க வேண்டும். அவர்களுக்கான அடையாளங்களாக நூல், கமண்டலம், முக்கோல் என்று வகைப்படுத்தப்படுகிறது தொல்காப்பியம். வடக்கிருந்து வந்தோர்,  நம்மிடம் இருந்த அந்த அறவோருடன் தம்மை அடையாளப் படுத்தி உயர்வைத் தேடியிருக்க வேண்டும் (நம் சாமிகளை அவர்களின் சாமிகளோடு அடையாளப் படுத்தியதைப் போல).                 ‌‌ ஆகையால்தான் தோராயமாக 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமூலர் அந்தப் போலி அந்தணர்களை 'பேர் கொண்ட பார்ப்பான்' என்று வசை பாடுகிறார்.
(4) நம்மிடம் இருந்த அந்த நான்கு பாகுபாடுகளும் சாதியத்தை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. அது பரம்பரையாகத் தொடரும் பாகுபாடு இல்லை என்பதற்குச் சான்றாக வேளிர், கிழார், கிள்ளி, ஆதன் முதலிய பல குடிகளைச் சேர்ந்தோர் அரசாட்சி செய்ததைச் சொல்லலாம். அந்தணர், வணிகர், வேளாளர் என்பாரும் அவ்வாறே தொழிலும் நெறியும் மாறும் போது மாறி மாறி அமைந்திருக்க வேண்டும்.
(5) நீங்கள் கூறிய பாடலைப் பாடிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்து வேற்றுமையும் நமக்கான அந்த நான்கு  படிம நிலைகளாகவே இருந்திருக்க வேண்டும் என்பது இவற்றை நன்கு ஆய்ந்த பேரா.கிருஷ்ணன் போன்றோரின் கருத்து.
(6) மற்றபடி பொருள்நிலை, ஆட்சி, அதிகாரம் சார்ந்து மேல் கீழ் பாகுபாடு எந்தவொரு சமூகத்திலும் இருந்திருக்கும். தமிழ்ச் சமூகத்தில் அது எழுதப்படாத விதியாக இருந்திருக்கும்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்