மாயோன் மேய காடுறை உலகமும் ..........- தொல்காப்பியம்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                         - சுப.சோமசுந்தரம்

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே".

- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

பாடற் குறிப்பு :
ஐவகை நிலங்களில் நான்கு வகை நிலங்களில் ஒவ்வொன்றிலும் தலைவன் அல்லது தெய்வத்தைக்  குறிக்கிறது தொல்காப்பியம். பாலையின் தெய்வம் குறிக்கப்பெறவில்லை. பாலை என்பது தமிழ் கூறும் நல்லுலகில் தனியான வரையறையின்றி, சிலப்பதிகாரக் கூற்றின்படி (காலச் சூழலினால்) குறிஞ்சியும் முல்லையும்                   முறைமையில் திரிந்து, கொற்றவையை வழிபடும் நிலம் எனலாம்.

பாடற் பொருள் :
மாயோனுக்கான காடு சார்ந்த உலகமும், சேயோனுக்கான மேகம் தழுவும் மலைநாடும் (மை - இங்கு மேகத்தைக் குறித்தது; வரை - மலை), வேந்தன் ஆளும் தீம்புனல் பாயும் கழனிகளும், வருணன் உறையும் பெருமணல் நிறைந்த கடற் பகுதியும் இவ்வாறு சொல்லுகிற  முறையே (வரிசையின் படி) முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லப்படும்.

பின் குறிப்பு: தொன்மையான நாகரிகங்களில் இயற்கையே வழிபாடாவது இயற்கை.
(1)மாயோன் - மால் என்ற வேறு பெயரும் வருகிறது. கரும்பச்சை வண்ணம் தமிழில் மால்  எனப்படும். அடர்ந்த  காடு இருண்டும் பசுமையாகவும் தோன்றுவதால், அந்த இயற்கை மாயோன் ஆகியிருக்கலாம்.
(2)சேயோன் - சிவந்தவன்; காலையும் மாலையும் தடையின்றி ஞாயிற்றின் சிவந்த கதிர்களால் பொலிவுறும் மலையின் தலைவன்/தெய்வம் சேயோன் என்றிருக்கலாம். தொல்காப்பியத்தில் வேலன் என்றும் (தொல் :1006), புறநானூற்றில் (பாடல் 298) முருகன் என்றும் வரும் குறிஞ்சி நில தெய்வத்தின் பெயர்கள் சேயோனோடு பொருத்தி நினைவில் கொள்ளத்தக்கவை. வேல் கொண்டு தலைவன் வெறியாடுதல் பேசப்படுதலால் (தொல்:  1006,1057,1061) சேயோன் வேலன் எனப்பட்டது தெளிவு.  முருகு என்பதன் பொருள் அழகு. மலையின் தோற்றப் பொலிவினால், மலையின் தலைவன் சேயோன் முருகன் ஆகியிருத்தல்  வேண்டும்.
(3)வயல் சூழ்ந்த செழுமையான பகுதியிலேயே அரசு வீற்றிருக்கும்; வேந்தனும் அமைவான். வேந்தன் அந்நிலத்தின் தெய்வமாதல் வியப்பில்லை. அல்லது, வேந்தன் என்பதற்கே தலைவன் என்று பொருள் (வேர்ச்சொல் - வேய்ந்தோன்); எனவே மருத நிலத் தலைவன் 'தலைவன்' என்று பொருள்படும் சொல்லாலேயே விளங்குவதிலும் வியப்பில்லை.
(4)கடல் மீது சென்று வாழ்வோர்க்குக் கடல் தெய்வம் வருணன் என்று வழங்கப்பட்டிருக்கலாம் (வேர்ச்சொல், வாரணம் - கடல்). அல்லது, வாரணம் எனும் வேர்ச்சொல்லிருந்து மழைக்கான தெய்வம் அந்நிலத்தில்  வருணன் எனப்பட்டு, மழை நெய்தலின் தெய்வம் ஆகியிருக்க வேண்டும். கடல் மீது செல்வோர் உகந்த அளவில் மழையின் அருள் வேண்டி நிற்பது இயற்கையே. எவ்வழியிலும் நெய்தல் தலைவன் வருணன் ஆனான்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்