பாவையைத் துயிலெழுப்புதல் - திருவெம்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                -சுப.சோமசுந்தரம்

"கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்"
---------திருவெம்பாவை, பாடல் 8.

பாடற் குறிப்பு :
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது; 51 பகுதிகளைக் கொண்டது; 7 ம் பகுதியான திருவெம்பாவையில் பாடல் 8 தற்போது நாம் எடுத்துள்ள பாடல்.
திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் அதிகாலையில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பில்  தமக்கு சிவனடியார் ஒருவரே மணவாளனாக  வேண்டியும், உலகோர்க்கு இறையருளுடன் வளம் பல வேண்டியும் இறைவனைப் (சிவபெருமானை, உமையவளை) பலவாறு போற்றிப் பாடுவது திருவெம்பாவை. குறிப்பாக இப்பாடல், கண்ணயர்ந்து துயிலும் பாவையை ஏனைய பாவையர்  அதிகாலையில் பாவை நோன்பிற்காகத் துயிலெழுப்புவது.

பாடற் பொருள் :
கோழியின் கூவலும், பறவைகளின் (குருகு)  ஆரவாரமும், இசைக்கருவிகளினால்  எழும் ஏழு சுரங்களும் (ஏழில் இயம்ப),  (அநேகமாக கோயிலிலிருந்து)  எங்கும் ஒலிக்கும் வெண்சங்கின் முழக்கமும், ஒப்பிலாத (கேழில்) ஆன்ம  ஒளியாகவும்  (பரஞ்சோதி) இறையருளாகவும் (பரங்கருணை) ஏனைய சிறந்த பொருள்களாகவும் (விழுப்பொருள்கள்) விளங்கும் இறைவனை (சிவபெருமானை) நாங்கள் போற்றிப் பாடுவதும் கேட்கவில்லையோ ? வாழிய நீ ! இதென்ன உறக்கமோ ? வாய் திறந்து பதிலிறுப்பாய் ! ஆழிதனில் (கடலில்) துயில் கொள்ளும் திருமால் (ஆழியான்) சிவனிடம் கொண்ட அன்பு இத்தகையதோ ? (இல்லையே !) ஊழிக்காலத்தும் முதல்வனாய் நிற்பவனை, வறியோரை உய்விப்பவனைப்  (சிவபெருமானை) பாடித் துதிப்போம், எம் பாவாய் ! (எனவே துயிலெழுந்து வந்திடுவாய் !)

பின் குறிப்பு :
"ஆழியில் துயில் கொள்ளும் திருமாலின் சிவநேயம் எத்துணைச் சிறப்பு மிக்கது ?" எனக்  குறித்ததன் மூலம்,  அத்தனை ஆரவாரத்திற்கும் ஊடாக பாவையானவள் சிவனை மறந்த உறக்கம் வாஞ்சையுடன் கடிந்து சுட்டப் பெறுகிறது.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்