முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் - குறுந்தொகை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                        - சுப.சோமசுந்தரம்

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்  றொண்ணுதன் முகனே"
    --------குறுந்தொகை, பாடல் 167. பாடியவர்: கூடலூர் கிழார்.

பாடற் களம் :
சீராட்டி செல்லமாக வளர்க்கப்பட்ட தலைவி திருமணமாகி கணவன் வீடு சென்றபின், எப்படி சமையல் செய்தாளோ என்று தாய் கவலை கொள்கிறாள்.  செவிலித்தாய் (Foster mother) பெண்ணின் வீடு சென்று மகளைப் பார்த்து வருகிறாள். தலைவி சமையல் செய்த பாங்கினில் தலைவன் சுவைத்து உண்டு அவளைப் பாராட்டியதையும், தலைவி அகமகிழ்ந்த நிலையையும் தாய்க்கு செவிலித்தாய் எடுத்தியம்புவதாய் வருகிறது பாடல்.

பாடற் பொருள் :
சற்றே புளித்த, முற்றிய தயிரை (முளிதயிர்) தனது காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்து, அவ்விரல்களைத் தன் சேலைத் (கலிங்கம்) தலைப்பால் துடைத்துக் (கழுவுறு) கொண்டாள் தலைவி (தலைவனுக்கு சோறு ஆக்குவதில் அவ்வளவு அவசரம்!). அத்துணியைக் கழுவி சுத்தம் கூடச் செய்யாமல் (கழாது), அத்தயிரைத் தாளிதம் செய்தாள். அதனால் ஏற்பட்ட வாசமிகு புகை (குய்ப்புகை - aroma after frying) அவளது குவளை போன்ற மையுண்ட கண்களை மறைக்க,  அந்த மிதமான புளிப்புடன் கூடிய தயிரில் தான் முனைந்து சமைத்த (உழந்து அட்ட) குழம்பைத் (தீம்புளிப் பாகர் - அட, நம்ம மோர்க்குழம்பு!) தலைவனுக்குப் படைத்தாள். அவனும் அதனை இனிதெனப்  பாராட்டி உண்ண, அவளது ஒளி பொருந்திய நெற்றியும், முகமும் (ஒள் நுதல் முகன்) மிக நுணுக்கமாக மகிழ்வைக் காட்டின.

பின் குறிப்பு :
புளித்து முற்றிய தயிரைத் (ஆகையால் புளி சேர்க்காமல்) தாளித்து வாசமிகு  மோர்க்குழம்பு செய்யும் காட்சி இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகியும் மாறவில்லை. தலைவன் பாராட்டி சுவைத்துச் சாப்பிட, தலைவி அகமகிழ்ந்து போகும் காட்சியும் மாறவில்லை. ' யாது செய்வாளோ மகள் ?' என்று தாயுறும் கவலையும் மாறவில்லை. ஏன் மாற வேண்டும் ? அல்லவை மாறி நல்லவை நிலைத்தலன்றி வேறு யாது மாந்தர் விருப்பம் ?

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்