மழை வேண்டி - திருவெம்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                    - சுப.சோமசுந்தரம்

"முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் !"
----திருவெம்பாவை, பாடல் 16.

பாடற் குறிப்பு :
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகம் மாணிக்கவாசகர் அருளியது; 51 பகுதிகளைக் கொண்டது; 7 ம் பகுதியான திருவெம்பாவையில் பாடல் 16 தற்போது நாம் எடுத்துள்ள பாடல்.
திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் அதிகாலையில் கன்னிப் பெண்கள், பாவை நோன்பில்  தமக்கு சிவனடியார் ஒருவரே மணவாளனாய் வர  வேண்டியும், உலகோர்க்கு இறையருளுடன் வளம் பல வேண்டியும் இறைவனைப் (சிவபெருமானை, உமையவளை) பலவாறு போற்றிப் பாடுவது திருவெம்பாவை. குறிப்பாக இப்பாடல் உலகோர்க்கு மழை வளம் வேண்டி உமையம்மையைப் போற்றிப் பாடுவது.

பாடற் பொருள் :
மேகமே (மழையே) ! கடல் நீரை அணுகி (முன்னி)  ஆவியாகச் சுருக்கி எழுந்து எம்மை  உடையாள் ( உமை) போலத் திகழ்ந்து (எங்கும் நிறைந்து), எம்மை ஆட்கொண்டவளின் (ஆளுடையாள்) இடை போல் அழகுடன் மின்னி (மின்னிப் பொலிந்து), எம் பிராட்டியின் திருவடியின் மேல் திகழும் பொற்சிலம்பு போல் ஒலித்து (சிலம்பி), அவளது திருப்புருவம் போல் வானவில்லிட்டு (சிலை குலவி), நம்மை ஆட்கொண்டவளைப் பிரியாத நம் கோமான் (சிவபெருமான்) தம் அடியார்க்கு (அன்பர்க்கு) அணுகி அருட்செய்து (முன்னி), நமக்கும் முந்திச் சுரக்கும் இனிய அருளினைப் போல் மழையைப் பொழிவாய் ! (அவ்வாறு வேண்டினோம்) எம் பாவாய் !

பின் குறிப்பு :
மேகம் எங்கும் பரவி நிற்பதும், மின்னுவதும், ஒலிப்பதும்,வில்லிட்டு நிற்பதும், பொழிவதுமான இயற்கை நிகழ்வுகளில் மணிவாசகர் தம் குறிப்பை ஏற்றிப் பாடியமையால், ஈண்டு தற்குறிப்பேற்ற அணியானது.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்