ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - திருப்பாவை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                     - சுப.சோமசுந்தரம்

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!"
----திருப்பாவை, பாடல் 3.

பாடற் குறிப்பு :
 திருநாலாயிரத்தின் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்) பகுதியான   திருப்பாவை, ஆண்டாள் நாச்சியார் அருளிய 30 பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் இறைவனிடம் (கண்ணனிடம், திருமாலிடம்) தமக்காக நல்ல மணாளனையும், உலகோர்க்கு மழை முதலிய வளங்களையும்  வேண்டி மேற்கொள்ளும் பாவை நோன்பில் பாடுவதாய் அமைவது. குறிப்பாக இப்பாடல், பெருமாளை வேண்டி பாவை நோன்பு மேற்கொண்டால், அதன் பயனாய் மழைவளம் பெருகி, உலகில் நெல்வளமும் பால் வளமும் (ஆநிரைச் செல்வம்) பெருகும் எனப் பாவையர் தமக்குள் பாடிச் சொல்வது.

பாடற் பொருள் :
(வாமன அவதாரத்தில்) ஓங்கி உலகளந்த உத்தமனின் (திருமாலின்) புகழ் (பேர்) பாடி, நாம் பாவை நோன்பிருந்து நீராடினால், தீமையின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்து, ஓங்கி வளர்ந்த பெரும் செந்நெற்கதிர்களுக்கிடையே பெருகி நிற்கும் நீரில் மீன்கள் (கயல்) துள்ளியாடும் (உகள);  குவளை மலரில் (போதில்) பொறிவண்டுகள் கண் துயிலும்; செழுமையான மடுவினைப் பற்றிக் கறக்கையில் (சீர்த்த முலை பற்றி வாங்க),                                                               உள்ளிருந்து தேங்காமல் (தேங்காதே புக்கிருந்து) குடம் முழுதும் பாலினை நிறைக்கும் வள்ளன்மை (வள்ளல் தன்மை) பொருந்திய பெரும்பசுக்கள் எனும் நீங்காத செல்வம் (நாட்டினில்) நிறையும், எம் பாவாய் !

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்