யாருமில்லை தானே கள்வன் - குறுந்தொகை

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                        - சுப.சோமசுந்தரம்

“யாரும் இல்லை; தானே கள்வன்;
தானது பொய்ப்பின், யானெவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”
    ----------குறுந்தொகை,   பாடல் 25.

பாடற் குறிப்பு :
பாடியவர் - கபிலர்.
தலைவன் தன்னைத் திருமணம் செய்யக் காலம் தாழ்த்துவதால், கலக்கமுற்ற தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள்.

பாடற் பொருள் :
அவன் என்னை மணந்த போது (மணந்த ஞான்றே),  அவ்விடத்தில் யாருமில்லை; அக்கள்வன், தான் மட்டுமே இருந்தான் (தானே கள்வன்). அவனே பொய்த்து விட்டால் (தான் அது  பொய்ப்பின்) நான் என்ன செய்ய முடியும்  (யான் எவன் செய்கோ)? தினையின் தாள் போல சிறிய, பசுமையான (tender, not green) கால்களையுடைய நாரையும் (குருகும்) அங்கே உண்டு. அதுவும் ஒழுகுகின்ற நீரோட்டத்தில் ஆரல் மீனைத் தேடிக் கொண்டிருந்தது (அதுவும் எங்களைப் பார்க்கவில்லை).

பின்குறிப்பு :
(1) மணந்த போது என்பது 'உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றிய போது' என்பதற்கான இடக்கரடக்கல்.
(2) பலவீனமான சாட்சியானது குருகு. அது சாட்சி சொல்லுமா ? அது கூட இவர்களைப் பார்க்கவில்லை.
(3) களவியல்,   உடன்போக்கு, கற்பியல் என்று செவ்விய சங்க கால வாழ்வில் தலைவன் ஏமாற்றிவிட்டுச் செல்லுதல் போன்ற சில நெறி பிறழ்வுகள் நிகழ ஆரம்பித்ததைத் தொல்காப்பியம் சுட்டுகிறது, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம்". அஃதாவது சமூகத்தில் பொய்யும், ஏமாற்றுதல் போன்ற குற்றங்களும் (வழு) தோன்றிய பின்னர் பெற்றோர், உற்றோர் போன்ற மூத்தோர் (அய்யர்) மணமுறைகளை (கரணம்) வகுக்க ஆரம்பித்தனர் (யாத்தனர்). பொய்யும் வழுவும் தமிழ்ச் சமூகத்தில் தோன்றியமைக்குக் கட்டியம் கூறுவதே இப்பாடலில் தலைவியின் கலக்கம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்