குரவர் பணி அன்றியும்.......சிலம்பு

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                         - சுப.சோமசுந்தரம்

"குரவர்பணி அன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப் பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி"
   ------சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை, வரிகள் 89-92.

பாடற் களம் :
புகார் நகர் நீங்கி, கண்ணகியுடன் மதுரை நோக்கிச் செல்லும் கோவலனிடம் கௌசிகன், மாதவி விடுத்த மடலைத் தருகிறான். அம்மடலில் மாதவி கோவலனைப் பிரிந்து மருகுகிறாள்.

பாடற் பொருள் :
முதுகுரவராகிய தாய்- தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்ததோடு மட்டுமல்லாமல், குலமகளான கண்ணகியுடன் இரவோடு இரவாக ஊரைவிட்டுச் செல்லும்  அளவிற்கு நான் செய்த பிழை யாது என அறியாது என் மனம் கையறு நிலையில் வருந்துகிறது. அவ்வருத்தத்தைத்  தாங்கள் போக்க வேண்டும். குற்றமற்ற காட்சிகளையே உடைய மேன்மையுடையவரே, போற்றி !

பின் குறிப்பு :
கதையோட்டத்தில், தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, போகிற போக்கில் மாதவி வாயிலாக இளங்கோவடிகள் சொல்லிச் செல்வது, மண்ணின் மரபு கூறும் பாங்கு; மனித மாண்பின் வெளிப்பாடு. ஒரு சமூகத்தில் ஒரு தார மணமுறை (monogamy) அல்லது பலதார முறை (polygamy, polyandry) என்னும் ஒழுக்கமெல்லாம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தைப் பொறுத்து காலச் சூழலுக்கு ஏற்ப மாறுபவை. ஆனால் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்ட காலகட்டத்திலும்,  சமூகத்தில் நிலையான ஒழுக்கமாக 'குரவர் பணி' வலியுறுத்தப் பெறுவது குறிக்கத்தக்கது.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்