ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே - புறநானூற்றுத் தாய்

தினம் ஒரு தமிழ்ப் பாடல் 
                       -  சுப.சோமசுந்தரம்

"நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென்  யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே"
  ----புறநானூறு 278.

பாடற் குறிப்பு :
பாடியவர் : காக்கைபாடினியார் நச்செள்ளையார்.
போரில் தனது மகன் புறமுதுகிட்டு இறந்தனன் என்ற (பொய்யான) செய்தி கேட்ட தாய் அவனை இழந்ததை விடத் துயருற்றதும், களத்திலேயே சென்று பார்த்து அவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரமரணம் எய்தினான்  எனக் கண்டு அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வுற்றதுமான மறம் (வீரம்) இப்பாடலில் வரையப் பெறுகிறது.

பாடற் பொருள் :
நரம்பு தெரிய வாடிய சிறிய மெல்லிய தோள்களும், தாமரை (முளரி) போன்ற விலாப் பகுதியும் (மருங்கு) உடைய முதியவள், தன் மகன் (சிறுவன்) படையின் திசை அழிந்து மாறினான் (அதாவது, புறமுதுகிட்டான்) என்று பலர் கூறக் கேட்டு, "பகை நெருங்கி வந்த போரில் (மண்ட - நெருங்கிய; அமர் - போர்) முறை உடைந்தான் (புறமுதுகிட்டான்) என்றால், அவன் பால் உண்ட முலையினை அறுத்திடுவேன் நான்" என்று சினந்து, வாளொடு சென்று (போர் நின்றிருந்த இரவில் அக்களம் சென்று), பிணங்கள் அகற்றப்படாத (படுபிணம் பெயரா) அக்குருதிக் களத்தில் (செங்களம்) தேடினாள் (துழவுவோள்). சிதைந்து உருக்குலைந்து கிடந்த மகனின் உடலைக் கண்டதும், அவனை ஈன்ற பொழுதை விட (ஈன்ற ஞான்றினும்) பெரிதும் மகிழ்ந்தாள் (பெரிது உவந்தனளே). (தானே விளங்கி நிற்பது - அவன் மார்பில் புண்பெற்று மாண்டதைக் கண்டாள்).

பின் குறிப்பு :
'களிறு எறிந்து பட்டனன் (யானையுடன் போரிட்டு மாண்டான்) என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே' என்னும் இதற்கு முந்திய புறநானூற்றுப் பாடல் (277) இங்கு குறிக்கத்தக்கது.
பண்டைத் தமிழர் நாகரிகத்தில் காதலும் வீரமுமே நிவந்து நின்றதால், 'சான்றோன்' எனும் சொல் அப்போது  வீரனைக் குறித்தது என்பர். 'சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே' எனும் புறநானூற்றுப் பாடலில் (பாடல் 312) இது தெளிவு. எனவே சங்க மருவிய காலத்துக் குறள் சொல்லும்
'ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்' என்பதில் 'சான்றோன்' வீரனையே குறித்தல் வேண்டும். தற்காலத்திற்கேற்ப அப்பாடல்களின் பொருள் கொள்ளுகையில், 'சான்றோன்' என்பதை 'கல்வி, கேள்விகளில் சிறந்தோன்' என ஏற்றல் வழக்கம். இவ்விடத்தில் பின்நவீனத்துவ எழுத்தாளர் யவனிகா சிரிராம் கூற்று நினைவுக்கு வருகிறது - "இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை". அதாவது, அந்தந்த காலத்திற்கு எழுத அவ்வக் காலத்தின் படைப்பாளி வருவான்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்