மீண்டார் என உவந்தேன் - திருக்கோவையார்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
"மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே
பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று
ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே
தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே".
----- திருக்கோவையார், பாடல் 244.
பாடற் குறிப்பு :
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் எட்டாம் திருமுறையாக அமைந்தன. திருக்கோவையாரில் 244 ம் பாடலே நாம் இன்று எடுத்தோதுவது. இப்பாடல் நாயகன் - நாயகி பாவத்தில் அமைந்த அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். பாடியவர் ஆணானாலும் பெண்ணானாலும் தம்மைத் தலைவியாகவும் தம் இறைவனைத் தலைவனாகவும் மனதில் வரிந்து பாடும் மரபு (genre) நாயகன் - நாயகி பாவம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இப்பாடலில் சங்க கால முறைமையின் வழி, தலைவனுடன் களவொழுக்கம் கொண்ட தலைவி அவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு செல்கிறாள். அவர்களைத் தேடி அழைத்து வர தலைவியின் செவிலித்தாய் (Foster mother) எதிர் வருவோரை விசாரித்தவாறு செல்கிறாள். தூரத்தில் இதே போல் உடன்போக்கு மேற்கொண்டு வரும் தலைவன் - தலைவியைப் பார்த்து, தன் மக்கள்தானோ என முதலில் மயக்கம் கொள்கிறாள். பின்னர் தெளிந்து அவர்களிடம் தன் மக்களின் அடையாளங்கள் சொல்லி விசாரிக்கிறாள். தலைவன் முதலில் அவளுக்குப் பதிலிறுத்து, தன் தலைவியிடமும் பதிலிறுக்கச் சொல்லுகிறான். இப்பாடலில் மூன்று திசைகளில் தகவல் பரிமாற்றம் நிகழ்வதும், யார் யாரிடம் பேசுகிறார்கள் எனத் தானே விளங்கி நிற்பதும் கூடுதல் சிறப்பு.
பாடற் பொருள் :
(1)"உங்களைக் கண்டு, (என் மக்கள்) மீண்டனர் என மகிழ்ந்தேன் (உவந்தேன்). இம் மேதகு ஒழுக்கம் (!!) பூண்ட இருவர் போனார்களே (போயினரே)!" - இது செவிலித்தாய்.
(2) "புலியூரில் நின்று ஆளும் இறைவனைப் போன்று, அரிய மலையின் (அருவரை; வரை - மலை) யாளி போன்று (தீரத்துடன்) ஒருவனை (அன்னானை - தாங்கள் சொன்னது போன்றவனை) தூரத்திலே (அயலே) கண்டேன்" - இது எதிர்வந்த தலைவன் செவிலித்தாயிடம்.
(3) "தூண்டாமல் ஒளிறும் விளக்கினைப் போன்றவளே! அன்னை சொன்னது எவ்வாறோ? (அன்னை சொன்னது போன்ற அத்தலைவியைக் கண்டாயா?)" - இது எதிர்வந்த தலைவன் தன் தலைவியிடம்.
பின் குறிப்பு :
(1) பக்தி இலக்கியத்தில் அகத்திணை சார்ந்த உடன்போக்கு என்பது, உலகியல் உறவுகள், விருப்புகள், கட்டுகள் அனைத்தையும் துறந்து இறைவனோடு ஒன்றும் நிலையைக் குறியீடாகச் சொல்வது.
(2) இத்தலைவன் அத்தலைவனையும், இத்தலைவி அத்தலைவியையும் நன்கு பார்த்திருக்கக் கூடும் எனும் செய்தியைப் போகிற போக்கில் பதிவு செய்வதின் மூலம், மாணிக்கவாசகர் அசைபோடும் தலைசிறந்த பண்பாடு எடுத்தியம்பாமல் தெற்றென விளங்கி நிற்கும். பக்தியினூடே பண்பாட்டையும் மறந்தாரில்லை மணிவாசகர்.
How to Make Money: 5 Steps to Betting on Sports
ReplyDeleteThe simplest way to bet on sports is to start งานออนไลน์ betting online with free credit card and make real money. Learn how to make money betting online