தாயுமானவர் 1

தினம் ஒரு தமிழ்ப் பாடல்
                         - சுப.சோமசுந்தரம்

"உடம்பறியும் என்னுமந்த
ஊழலெல்லாம் தீரத்
திடம் பெறவே எம்மைத் தரிசிப்பது எந்நாளோ ?"
             -தாயுமானவர்.

பாடற் குறிப்பு :-
தாயுமானவர் 'கண்ணிகள்' எனும் தலைப்பிட்டுப் பாடல்களை இயற்றினார். 'பராபரக் கண்ணி'யில் பாடல்கள் 'பராபரமே' என முடியும். 'பைங்கிளிக் கண்ணி'யில் 'பைங்கிளியே' என முடியும். ' எந்நாள் கண்ணி'யில் பாடல்கள்  'எந்நாளோ' அல்லது 'எந்நாளே' என முடியும்.
மேற்கூறிய பாடல் எந்நாள் கண்ணியில் 'தன் உண்மை' எனும்  ஏழாவது பகுதியில் முதற் பாடல்.

முன் விளக்கம் :-
முறைப்படி - நெறிப்படி - நிகழ்வதற்கு ஊழ் என்று பெயர். (முன்னை வினையின் பயனாய் நிகழ்வது என்பது முறைசார்ந்த நிகழ்வாய்க் கொள்ளப்பட்டதால், ஊழ்வினை எனப்பட்டது. முறைதவறியது ஊழ்+அல் = ஊழல் ஆனது ).

பாடற் பொருள் :-
உடல் சார்ந்த சிற்றின்பம் (!) எனும் அக்குற்றமெல்லாம்  (!!) தீர்ந்து உள்ளம் திடம் பெற எம் இறைவனின் (எம்மை = எம் + ஐ; ஐ என்பது தலைவனைக் - இறைவனை - குறிப்பது) தரிசனம் கிடைக்கும் நாள் எந்நாளோ ?

மேற்குறிப்பு :-
பொதுவாக பட்டினத்தார், தாயுமானவர் சுவாமிகள் போதிக்கும் அற நெறிகளில் என் போன்றோர்க்கு  மாறுபாடு இல்லை - பெண் உடலைச் சற்று வெறுப்புடன் பார்க்கும் கோட்பாடு (!) தவிர. அது ஆணாதிக்க மனோபாவம் என்பது என் தாழ்மையான எண்ணம். உதாரணமாக தாயுமானவர் சொல்வார் :
"உந்திச் சுழியால் உளத்தைச் சுழித்த கன
தந்தித் தனத்தார் தமை மறப்பது எந்நாளோ ?"
அஃதாவது 'தொப்புளின் (உந்தி) சுழியால் நம் மனதைச் சுழல வைத்த, களிறு (தந்தி - ஆண் யானை) போன்று வீரிய மார்பகம் வாய்ந்த அப்பெண்டிரை மறப்பது எந்நாளோ ?' என்று இறைவனை வேண்டுகிறார். 
என் கருத்து (என்னுடன் இதில் உடன்படும் நண்பர்கள் உண்டு எனும் தைரியமும் உண்டு) : ஏன் மறக்க வேண்டும் ? அந்த  உந்தியிலும் தனத்திலும் இறைவன் உறையவில்லை என்று யார் சொன்னது ?
சரி, இதிலெல்லாம் அவரவர் கருத்து அவரவர்க்கு !

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்