C.N.N 1

வெகு நாளாயிற்று கதை சொல்லி. 'அவரா இவர்!' என நான் ஆச்சரியப்பட்ட ஒருவரின் கதையை உங்களுடன் பகிர எண்ணம். அவரை X என்று குறிப்போம். தமது 17 வது வயதில் (1958 ல்) இளங்கலை மாணவராக இருந்த போது, தி.க வின் 'விடுதலை' பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை அனுப்பினார். இளைஞர்களை ஊக்குவிக்கும் பெரியார் அக்கட்டுரையைப் பிரசுரித்தார். அது சௌகார்பேட்டையை வட இந்திய பனியா சமூகத்தினர் ஆக்கிரமிரப்பதற்கான எதிர்க்குரல். ஏற்கெனவே திராவிடர் கழகம் கையிலெடுத்த விஷயம்தான். குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, 'விடுதலை' யின் மீது ஏற்கெனவே காட்டத்தில் இருந்த அதிகார வர்க்கம், இந்தக் கட்டுரையை எடுத்துக் கொண்டு பத்திரைக்கையின் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. வடவரை மட்டுமல்ல, பிராமணர்களையும் சாடுவதே அதற்கு முக்கிய காரணம். அக்காலத்தில் அதிகார வர்க்கம் என்றால் அவர்கள்தானே!  கட்டுரை எழுதிய நமது X க்கும், பத்திரிக்கை ஆசிரியர் மணியம்மையாருக்கும் எதிராக அரசு வழக்குத் தொடர கோப்பு தயாரானது. நிதியமைச்சர்  சி.சுப்பிரமணியம் குறிப்பெழுத, உள்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலம் வழிமொழிய, முதலமைச்சர் காமராஜர் ஒப்புதலளித்தார். இவையனைத்தும் Mr.X க்கு பெறற்கரிய பேறு. கட்டுரையில் பாரதிதாசனின் பாடலும், மு.வரதராசனாரின் கட்டுரைக் குறிப்பும் இடம்பெற்றதால் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றி X க்கு ஆதரவாக, எவ்வித சமூக வெறுப்பையும் கட்டுரை தூண்டவில்லை என சாட்சியளித்தனர். ஆகா, ஆகா ! யாருக்கும் கிடைக்கும் இந்த பாக்கியம் ? இருப்பினும் நீதிமன்றம் 100 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மாத சிறைத்தண்டனை விதித்தது. திராவிடர் கழகக் கொள்கையின் படி மணியம்மையார் சிறை சென்றார். Mr.X ஒரு மாத அவகாசம் கேட்டு தண்டம் செலுத்தினார். காட்சி 1 முடிந்தது. இனி காட்சி 2 : நமது X M.A  முடித்து கல்லூரியில் சேர்ந்து பணியின் போது Ph.D முடித்து, ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். ஒரு உயர்ந்த நிலை ஒரு காலத்தில் அவர் தலையில் ஏற்றப்பட்டதைப் பற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை. அடக்கமோ !!! சமூகம் சார்ந்த எந்த விஷயத்திற்கும் வருவதில்லை. எந்த சமூகக் கட்டுரையும் எழுதவில்லை. துறைசார்ந்தும் எந்த சான்றாண்மையும் அவரிடம் தென்படவில்லை. ஆசிரியர் தொழிலை விட அதிகாரத்தை மிக நேசித்தார். ஒரு பல்கலையில் உள்ள பிசாத்து பதவிக்கெல்லாம், நம்மில் பெரும்பாலானோரைப் போல் அலைந்தார். நியமங்களை அதிகம் பேசி எதிர்மறை எண்ணங்களுடனேயே வாழ்ந்தார். அவர்  இரத்தத்தில் பச்சை மையே ஓடியது. 80 வயது வரை வாழ்ந்து மறைந்தார். ஏன் தமக்கு வாய்த்ததை வெளிக்காட்டி இளைஞர்களுக்கு ஒளி விளக்காய் இருக்கவில்லை ? என் கணிப்பு : அவருக்கு துணைவேந்தர், பதிவாளர் போன்ற பதவிகளின் மீதே கண். அவற்றிற்கு மனுச் செய்யும்போது பழைய FIR எல்லாம் தூசு தட்டி எடுக்கப்பட்டு தமக்கு எதிராகப் போய்விட்டால் என்ற பயம் இருந்திருக்கலாம்.
இந்தப் பதவியையெல்லாம் விட உயர்வான நிலை தமக்கு, தானாகக் கிடைத்ததை உணராமலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற ஆதங்கம் எனக்கு. குறைந்த பட்சம் என்னளவு வாழ்க்கையாவது வாழ்ந்திருக்கலாமே ! X யார் என்பது முக்கியமில்லை. கதையின் படிப்பினையே முக்கியம். தமிழக பல்கலைக்கழகங்களில் விசாரித்து X ஐக் கண்டுபிடித்து விட்டேனாக்கும் என்று மார்தட்ட வேண்டாம். எதையாவது எதிர்பார்த்து, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அதிகார வர்க்கத்தை நீங்கள் சுற்றி வரவில்லை என்று உங்களுக்கு உறுதியாகத்  தெரிந்தால், உங்கள் தன்னம்பிக்கையைப் பற்றி மார் தட்டிக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்