வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி

தினம் ஒரு தமிழ்ப் பாடல்                             - சுப.சோமசுந்தரம்

"வாரண மாயிரம் சூழ வலம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்".
-------நாச்சியார் திருமொழி, வாரணம் ஆயிரம், பாடல் 1.

பாடற் குறிப்பு :
திருநாலாயிரத்தின் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்) பகுதியான 'நாச்சியார் திருமொழி' ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்டது; 143 பாசுரங்கள் கொண்டது; 14 திருமொழிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது;  'வாரணம் ஆயிரம்' எனும் ஆறாம் திருமொழியின் முதற் பாடலே தற்போது நாம் எடுத்துள்ளது. இம்முதற் பாடல் வாரணமாயிரம் எனத் தொடங்குவதை வைத்தே ஆறாம் திருமொழி 'வாரணமாயிரம்' எனப் பெயர் பெற்றது.
கண்ணனையே தன்  தலைவனாய் மனதில் வரிந்து, ஆண்டாள் உருகிய இறைநிலைக் காதலே நாச்சியார் திருமொழி. அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். வாரணம் ஆயிரத்தில் கண்ணன் திருநம்பிக்கும் ஆண்டளுக்கும் நிகழும் திருமணத்தில், சடங்குகள் ஒவ்வொன்றாக ஆண்டாள் நாச்சியாரின் கற்பனையில் பக்தியும் காதலும் கலந்து  அரங்கேறுவதை  இன்புற்று ரசிக்கலாம். நாம் எடுத்த இந்த முதற் பாடல், மாப்பிள்ளை பெண் கேட்டு வர, பெண் வீட்டாரின் (ஊராரின்) மாப்பிள்ளை அழைப்புக் காட்சி பற்றிய ஆண்டாளின் கற்பனை.

பாடற் பொருள் :
ஆயிரம் யானைகள் (வாரணம்) சூழ வலம் வந்து நாரண நம்பி நடக்கின்றான். அவனை எதிர்கொண்டு - வரவேற்கும் முகமாக - நீர் நிரம்பிய (பூரண) பொற்குடங்கள் ஏந்தி (மகளிர்) வரவேற்க, சுற்றுப் புறமெங்கும் தோரணங்கள் நாட்டியுள்ளதாகக் கனாக் கண்டேன் தோழீ நான் !

பின் குறிப்பு :
பிற்காலத்திய சொல்லாக்கத்தில் 'நாயகன்-நாயகி பாவம்' என ஒன்று உண்டு. அஃது பாடுபவர் ஆணானாலும் பெண்ணானாலும், தம்மை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் மனதில் கொண்டு பாடும் பக்தி கலந்த அக இலக்கியமே ஆகும். நாச்சியார் திருமொழியில் ஆண்டாளும்,  திருத்தாண்டகத்தில் நாவுக்கரசரும், திருக்கோவையாரில் மணிவாசகரும் தத்தம் இறைவனுடன் கொண்ட நிலை அது. ஆண்டாள் பெண்ணாதலின், இந்நிலை அவருக்கு இன்னும் ரசனையுடன் அமைந்தது எனலாம்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்