தமிழ்த்தாய் வாழ்த்து
பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம்.
பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவும், தமிழகத்தை அந்நெற்றியின் திலகமாகவும், திலக வாசனையைத் தமிழ் மணமாகவும் உருவகித்தது உருவக அணி. பாடலில் மஞ்சள் பட்டை அடிக்கப்பட்ட, தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தில் வராத பாடற்பகுதியின் பொருளும் தெளிவாகக் கரும்பட்டையில் காண்பிக்கப் பட்டுள்ளது. அப்பகுதியில் பரம்பொருள் என்று பேரா. சுந்தரம்பிள்ளை சொல்வது உலகளாவிய சிவனையே குறிக்கும் என்பர் (சுவாமி விவேகானந்தர் 1892ல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, அவரது உரையின் பின் நடந்த ஆரோக்கியமான விவாதத்தில் பேரா.சுந்தரம் பிள்ளை,"I am not a Hindu, I am a Saivite" என்று வாதிட்ட குறிப்பு உண்டு). எனவே குறிப்பிட்ட மதம் சார்ந்த வரி எனும் விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனைய மொழிகளைப் பற்றிய குறிப்புகளைத் தவிர்க்கவும் அப்பகுதி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்டது. ஆனால் திமுக எதிரிகள் சிலர், முதல்வர் கருணாநிதி நாத்திகர் என்பதாலும், தெலுங்கர் என்பதாலும் அப்பகுதியைத் தவிர்த்தார் என்று குற்றஞ்சாட்டுவர். ஆகாத மாமியார் கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்.
- சுப.சோமசுந்தரம்
Comments
Post a Comment