மனிதத்தின் அழகியல் அழகேசனார்
மனிதத்தின் அழகியல் அழகேசனார்
- சுப.சோமசுந்தரம்
பேரா. அழகேசன் அவர்களுடன் பணிசெய்யக் கிடைத்தமை யாம் பெற்ற பேறு எனில், அவ்வாய்ப்பு குறுகிய காலத்திற்கே கிட்டியமை எம் பெருங்குறை. அந்நல்லாரைக் காண்பதும், நலம் மிக்க அவர்சொல் கேட்பதும், அவர்தம் புகழுரைப்பதும், அவரோடு இணங்கி இருப்பதும் நம் அனைவருக்கும் நன்றே. ‘நல்லார்’ எனும் அவர் பண்பினையும் ‘சான்றோர்’ எனும் அவர் சீர்மையினையும் சீர்தூக்குங்கால், முன்னம் பேசப்பட வேண்டியது அவர்தம் பண்பே எனத் தோன்றுகிறது. ஏனெனில் தகைசால் பண்பு எனப்படுவது மாந்தர் அனைவருக்குமானது. பாமரர், பண்டிதர் அனைவருக்குமானவர் அழகேசன்.
அவர் பண்பு நலம் பேச, நண்பர்களுள் எனக்குக் கூடுதலான ஒரு தகுதியும் உண்டு. அஃது அவரது சொந்தக் கிராமத்தில் வாழ்க்கைப்பட்டவன்(!) நான் என்பதே. அவரை அவர்தம் ஊர் மெச்சுவதைக் கேட்டவன் நான். பல்கலையில் ஊரார் மெச்சுவதையும் கேட்டவன் நான். யாவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியாப் பராபரம் அவர். இதற்கு அன்பே அடிப்படையாதலின், திருமந்திரத்தில் சிவத்தை அழகாய்ச் ‘சுடுதலில்’ நமக்கு அலாதி இன்பம் :
"அன்பும் அழகும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே அழகாவது ஆரும் அறிகிலார்
அன்பே அழகாவது ஆரும் அறிந்தபின்
அன்பே அழகேசனாய் அமர்ந்திருந்தாரே".
பொது நலத்திற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுக அழைத்தால், மறுசிந்தனையின்றி உடனே எழுபவர் அழகேசன். அவ்வாறான ஒரு சமயம் தம்மை நோக்கி வீசப்பட்ட சுடுசொல்லை அவர் தாங்கிக் கலங்காமைக்கு நான் சாட்சி.
"குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்"
எனும் குறளின் பொருள் விளங்கச் செய்தவர் அழகேசன். பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் நம்மையொத்த பொது நோக்குடையவர் பேராசிரியர் அழகேசன் என எனது மூட்டா இயக்க நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அழகேசன் அவர்களின் விருந்தினராய் ஒரு முறை வாய்க்கப் பெற்றோர் அறிவர் விருந்தோம்பலின் மெய்ப்பொருளை. விருந்தோம்பலிற் சிறந்தவர் என்பதைவிட அவரே நல்விருந்து எனச் சொல்வது சாலப் பொருத்தம்.
"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு"
எனும் குறளின் பொருள் அவர். ஈண்டு அன்னாரது துணியவியாரின் பங்களிப்பும் உண்டு. மனம் கலங்கியோருக்கு ஆறுதலாகவும் விளங்குதலால் இருவரும் விருந்தும் மருந்துமாய் அமைதல் தனிச்சிறப்பு (திருமதி. அழகேசன் ஒரு மருத்துவர் என்பது தற்செயல் நிகழ்வு).
மானிட வாழ்வியலின் இலக்கணமாய் அமைந்த அவரிடம் காற்றுவாக்கில் இலக்கண, இலக்கியம் கேட்ட அனுபவம் தனி. மொழியிலக்கணத்தில் தொல்காப்பியம் முதன்மையானது. அதன் தனிச்சிறப்பாவது மொழி மட்டுமின்றி மொழி சார்ந்த மண், மாந்தர், மலர்வனம், புள்ளினம் (Flora and Fauna), சமூகவியல் அனைத்தும் பேசுவதே மொழியிலக்கணம் என வரையறுப்பது. இதன்மூலம் தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமே மொழி (Medium of Communication) எனும் உணர்வற்ற அதிமேதாவித்தனத்தை உடைத்தெறிவது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் சமூகப் பதிவிற்குச் சான்றாய்
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம்"
என்பதுவும், பொய்யும் வழுவும் தோன்றியதற்குச் சான்றாய் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் குறுந்தொகைத் தலைவி தன் காதலுக்கு சாட்சியாய்க் குருகினை அழைத்தமையும் அழகேசனிடம் கேட்ட நினைவு. இதனைப் பாமரனுக்கான மொழியில் பகர்வது அன்னாரது சிறப்பியல்பு.
கசடறக் கற்பதும் கற்றவழி நிற்பதுமே சான்றாண்மையாம். இஃது முழுமையாய் வாய்க்கப் பெற்றவர் அழகேசன். அவர்தம் காலத்தில் வாழ்ந்து அவரோடு பேசிப் பழகி மகிழ்ந்திடும் அரியதொரு செவ்வி வாய்க்கப் பெற்றோர் நாம்.
Comments
Post a Comment