குகனொடும் ஐவரானோம்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
என் இளம் பிராயத்தில் என் ஆச்சி (பாட்டி) அடுத்த வீட்டு ஆச்சியிடம் என் சேட்டைகள் குறித்து அங்கலாய்த்தாள், “ஒம் பேரன் என்னா சேட்டை பண்ணுதாங்கே !”. நிஜத்தில் நான் இவளுக்குத்தான் பேரன். என்னை அவள் பேரன் ஆக்கியது அவர்களது நட்பின், உறவின் நெருக்கத்தைக் காட்டுவது. சில காலம் கழித்துத் தமிழாசிரியர், கம்பனின் யுத்த காண்டத்தில்
“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகலருங் கானம் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை"
என இராமன் வீடணனுக்குச் சொன்னதை எடுத்துரைத்த போது சத்தியமாக என் ஆச்சிதான் நினைவுக்கு வந்தாள். தயரதனின் நான்கு புதல்வரோடு குகனை ஐந்தாவதாக, சுக்ரீவனை (குன்று சூழ்வான் மகன்) ஆறாவதாக, அன்பினால் எதிரிக் கோட்டையிலிருந்து வந்த வீடணனை ஏழாவதாக வரிசைப்படுத்துகிறான் இராமன். அத்தோடு நின்றானில்லை. “அரிய கானக வாழ்வை எமக்குத் தந்து மென்மேலும் புதல்வர்களால் பொலிவு பெற்றான் உன் தந்தை (நுந்தை)" என்கிறான். வீடணனை உடன்பிறப்பாய் ஏற்ற இராமன் தன் தந்தையை 'உன் தந்தை' எனச் சொல்லி உடன்பிறப்பு எனும் உறவை உடனே உறுதிப்படுத்துகிறான். தன் பேரனை 'உன் பேரன்' எனத் தோழியிடம் சொன்ன என் ஆச்சி கம்பனை அறிந்தாளில்லை. கம்பன் அவளை அறிந்திருக்கிறான் என்பதை உணர்ந்து வியந்துதான் போனேன்.
Comments
Post a Comment