இலக்கியத்தின் உறுபொருள்
இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது.
மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812இல்
"வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர்
என்னைச் செற்றார் தீயரே எனினும்
உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்"
என்று சுக்ரீவனிடம் நட்பு பாராட்டுகிறான் இராமன்.
பாடற் பொருள் :
விண்ணுலகானாலும் மண்ணுலகானாலும் உன்னைப் பகைத்தவர் (செற்றவர்) என்னையும் பகைத்தார்; தீயவராய் இருப்பினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர்.
இலக்கியம் அறிந்தோர் ஒரு பாடலை மேம்போக்காகப் பொருள் கொள்வதில்லை. 'தீயரே எனினும்' என்றது நட்பின் திண்மை பற்றிக் கூற வந்த உயர்வுநவிற்சி. அவ்வளவே ! மேலும் அது தேர்ந்து தெளிந்த நட்பின் மீது உள்ள நம்பிக்கை. அத்தகு நண்பன் தீயோரை நட்பாகக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையும் உள்ளடக்கியது.
"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"
(குறள் 580)
என்ற வள்ளுவமும் நட்பின் வலிமையும் நம்பிக்கையும் பற்றியது. மேலும், தேர்ந்து தெளிந்த நண்பன் தந்ததோ சொன்னதோ மனதிற்கு ஏற்புடைத்தாய் இல்லையெனினும் அதனை ஏற்றமைவது நாகரிகம் என்பதன் குறியீடே குறளில் வந்த நஞ்சும் நாகரிகமும்.
"முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்"
(நற்றிணை பாடல் 355; வரிகள் 6 & 7)
என்று மேற்சொன்ன குறளுக்கு நல்ல இணையாக நற்றிணை பகர்வதும் உவந்து நோக்கத்தக்கது.
Comments
Post a Comment