அனிச்சம் பூ கால் களையாள்
தினம் ஒரு தமிழ்ப் பாடல்
- சுப.சோமசுந்தரம்
எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை ( ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலே ! தனியாவா தூக்குத? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் நலம் புனைந்துரைத்தலில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காணலாம் :
"அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு
நல்ல படாஅ பறை"
(குறள் 1115; நலம் புனைந்துரைத்தல்)
மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு) – இடை ஒடிந்ததற்கு – நல்ல பறை படவில்லை (ஒலிக்கவில்லை). அஃதாவது சாப்பறை (இழவு கொட்டு) ஒலித்தது. உரலை நகர்த்தியதற்கு எலும்பொடிந்து சாவு நிச்சயம் எனும் மிகைப்படுத்தலை மிதமிஞ்சிய உயர்வு நவிற்சி அனிச்சத்தின் காம்பினால் இடையொடிந்து சாப்பறை ஒலித்தது. பாமரன் கோடு போட்டால் பாவலன் ‘ரோடு’ போட வேண்டாமா? அதுதானே இலக்கிய இன்பம் !
Comments
Post a Comment