துணையொத்த கோவையும்

 அகத்திணை ஒழுக்கத்தில் பக்தி இலக்கியமாக  நாவுக்கரசரின்  திருத்தாண்டகம் முன்னம் இடம்பெற்றது. இஃது பன்னிரு திருமுறைகளில் ஆறாம் திருமுறையில் உள்ளது. பக்தானாகிய தலைவி திருவாரூர் தியாகேசனாகிய தலைவனுடன்  உடன்போக்கில் (ஓடிப்போதலில்) உய்வினை (முக்தியை) நோக்கிச் செல்லும் காட்சி அது. இப்போது இதற்கு முந்தைய பாடலில் எட்டாம் திருமுறையில் அமைந்த மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் திருப்பாதிரிப்புலியூர் இறைவனுடன் உடன்போக்கினைக் காணும் பேறு பெற்றோம். தற்போது பதினொன்றாம் திருமுறையில் உள்ள பட்டினத்தாரின் திருஏகம்பமுடையார் திருவந்தாதிப் பாடலொன்று காணலாம் (பரவலாக அறியப்பட்ட 'முன்னை இட்ட தீ முப்புரத்திலே' பாடிய  பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்). இப்பாடலில் தலைவன் திருஏகம்பமுடையார் என்பது அந்தாதியின் தலைப்பினால் தெற்றென விளங்கி நிற்பது. இன்றைய பட்டினத்தார் பாடலும் நாம் நேற்று கண்ட திருக்கோவையார் பாடலும் ஒரே காட்சிக் களத்தைக் கொண்டவை.


தினம் ஒரு தமிழ்ப் பாடல் :


"துணையொத்த கோவையும் போலெழில்

பேதையும் தோன்றலுமுன்

இணையொத்த கொங்கையொ டேயொத்த

காதலொ டேகினரே

அணையத்தர் ஏறொத்த காளையைக்

கண்டனம் மற்றவரேல்

பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே"

           திருஏகம்பமுடையார் திருவந்தாதி, பாடல் 73.


பாடற் பொருள் :

துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் - உன் துணைவியான தலைவியின் கொடி (கோவை) போன்ற அழகினை (எழில்) உடைய பேதை நிலைப் பெண்ணும்;

உன் இணையொத்த - உன் தலைவியைப் போன்ற;

கொங்கையொடே - முலையொடும் (திகழும் அப்பேதையும்);

தோன்றலும் - தலைவனும்;

ஒத்த காதலொடு - (உங்களைப்) போன்ற காதலோடு; 

ஏகினரே - சென்றனரே;

அணையத்தர் - அவ்வாறான;

ஏறொத்த காளையைக் கண்டனம் - ஏறுபோன்ற இளைஞனைக் கண்டேன்;

மற்றவரேல் - மற்றபடி அப்பெண்ணைப் பற்றி என்றால்; 

பிணையொத்த நோக்குடை -  பெண்மானின் (மருண்ட பார்வையுடைய);

பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே - பெண்ணிவளிடம் பேசுவீர்களாக !


பின் விளக்கம்  :    நாம் நேற்று கண்ட திருக்கோவையார் பாடலில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலித் தாயின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம்."என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி