ஈன்ற ஞான்றினும் பெரிதே
புறநானூற்றுத் தாய் ஒருத்தி தன் மகன் தான் களத்தில் விழுவதற்கு முன் களிற்றியானை (ஆண்யானை) ஒன்றை வேல் எறிந்து வீழ்த்தினான் என்று அறிந்து அவனை ஈன்ற பொழுதை விடப் பெரிதும் உவந்தாள். அது வீரம் பற்றிய புறநானூற்று பாடல் ஒன்றின் முதற்பகுதி. அத்தோடு முடிந்தால், "அவள் ஒரு வீரத்தாய் மட்டும்தானா ? தாய் இல்லையா ? மகனை இழந்த செய்தி கேட்டதும் தனது உலகமே இருண்டது போன்ற இயற்கை உணர்வெல்லாம் ஒரு வீரப் பெண்மணிக்கு ஏற்படாதா ? வீரம் என்பது உணர்வற்ற வறட்டுத்தனம்தானா ?" என்ற கேள்விகள் எழ வாய்ப்பு உண்டு. இக்கேள்விகளுக்கு விடையைப் பாடலில் பிற்பகுதி தருகிறது. மூங்கிலின் உட்தங்கிய மழைநீரானது காற்றில் மூங்கில் அசையும் போது வடியும் அல்லது சிதறுமே, அதைவிடப் பல மடங்கு அவளது கண்கள் நீரை வெளிப்படுத்தின.
"மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"
(புறநானூறு 277)
பொருள் விளக்கம் :
மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற;
வால்நரைக் கூந்தல் - தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய;
முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்;
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் விழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி;
ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே;
வெதிரத்து - புதரில்;
துயல்வரும் - அசைந்தாடும்;
நோன் - வலிய;
கழை - மூங்கில் கழியில்;
வான் பெய - மழை பெய்யும் போது;
தூங்கிய - தங்கிய;
சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்).
Comments
Post a Comment