கேள்விக்கு இனியை கட்கின்னாயே !
தினம் ஒரு தமிழ்ப் பாடல் :
வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, நமது சென்ற பதிவில் ("பாரி பாரி என்று பல ஏத்தி ......") கபிலர் பாரி வள்ளலை இகழ்வது போலப் புகழக் கண்டோம். இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம்.
"நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு
கேள்விக்கு இனியை கட்கின் னாயே !
அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின்
ஊறுஅறியா மெய் யாக்கை யொடு
கண்ணுக்கு இனியர் செவிக்குஇன் னாரே!
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும்ஒன்று இனியர்
ஒவ்வா யாவுள மற்றே ? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி !
நின்னை வியக்குமிவ் வுலகம் அது
என்னோ? பெரும ! உரைத்திசின் எமக்கே"
(புறநானூறு பாடல் 167)
பொருள் : போர்க்களத்தைக் கண்டவிடத்து (அமர்காணின்) நீயே நேரில் களம் புகுந்து (நீயே அமர் கடந்து), பகைவர்தம் படை விலக்கி அவர் எதிர் நிற்கிறாய்; ஆதலின் வாளினால் வாய்த்த (வாஅள் வாய்த்த) ஆழமான வடுக்களால் ஆன (வடு ஆழ்) மேனியுடன் (யாக்கையோடு) - புகழினால் - கேட்பதற்கு இனிமையானவனாய்த் திகழ்கிறாய் (கேள்விக்கு இனியை); பார்ப்பதற்கு - வடுக்கள் பட்டதால் - இனியனாய் இல்லை (கட்கு - கண்ணுக்கு - இன்னாயே). அவரே - அப்பகைவரே - உன்னைக் கண்டதும் புறமுதுகிடுவதால் (நிற்காணின் புறங்கொடுத்தலின்), குறையற்ற (ஊறு அறியா) தத்தம் மேனிப் பொலிவுடன் (மெய்யாக்கையொடு) கண்ணுக்கு இனிமையானவர்; புகழற்று - கேட்பதற்கு இனிமையற்றோர் (செவிக்கு இன்னாரே). அதனால் நீயும் ஒரு வகையில் இனிமையானவன்; அவரும் ஒருவகையில் இனிமையானோர். இருவருக்கும் பொருந்தாத தன்மை எவை உண்டு ? (ஒவ்வா யாவுள மற்றே ?) வெல்லும் போர் புரியும் வீரக்கழல் புனைந்த (வெல்போர்க் கழல் புனை) சீரிய திருவடிகளையும் (திருந்தடி), விரைந்து செல்லும் குதிரையையும் உடைய (கடுமான்) கிள்ளியே ! உன்னையே புகழும் (வியக்கும்) இவ்வுலகம். அதன் காரணம் என்ன, பெருமைக்குரியவனே (என்னோ பெரும) ! எனக்குச் சொல்வாயாக (உரைத்திசின் எமக்கே) !
பின் குறிப்பு :
சான்றோர் கேண்மையால் வாசிப்பில் இன்பம் கொண்டு எதையெதையோ வாசிக்க, எதையெதையோ பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறதே ! தோன்றியதோடு நில்லாமல், சிறியளவு ஆட்டமாயிருப்பினும் ஆடியகால் நில்லாது என்பதற்கு இயைய, எழுதுகோலைக் கை தேடுகிறதே ! சரி விடுங்கள், அமர்காணின் தினவெடுக்கும் தோள்கள் இல்லாவிடினும் எழுத அரிப்பெடுக்கும் கையாவது வாய்க்கப் பெற்றதே!
Comments
Post a Comment