மாதர்ப் பிறைக் கண்ணியானை
தினம் ஒரு தமிழ்ப் பாடல் :
"மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்து ஏந்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதன கண்டேன்"
(நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 1)
பொருள் விளக்கம் :
மாதர்பிறை - அழகிய பிறையினை;
கண்ணியானை - தலையில் அணியாகச் சூடியவனை;
மலையான் மகளொடும் பாடி - மலையின் தலைவனது மகளோடு துதித்துப் பாடி;
போதொடு - மலர்களோடு;
நீர் சுமந்தேத்தி - வழிபாட்டிற்கு உரிய நீரினைச் சுமந்து ஏற்றி;
புகுவார் அவர்பின் புகுவேன் - (அடியார்கள்) செல்வார்கள், அவர்கள் பின் செல்வேன்;
யாதும் சுவடு படாமல் - நிலத்தில் பாதச்சுவடு படாத அளவு மென்மையாய் நடந்து சென்று; ஐயாறு அடைகின்றபோது - திருவையாறு அடைகின்றபோது;
காதல் மடப்பிடியோடு - காதலும், மடம் எனும் பெண்மை உணர்வும் கொண்ட பெண் யானையோடு;
களிறு வருவன கண்டேன் - ஆண் யானை வரக் கண்டேன்;
கண்டேன் அவர் திருப்பாதம் - அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்;
கண்டறியாதன கண்டேன் - இதுவரை கண்டறியாத பொருள் விளக்கம் கண்டேன்.
பின் குறிப்பு :
திருவையாறு பதிகத்தின் மேற்கண்ட முதற்பாடலில் யானையைக் கண்டவர் அடுத்து வரும் பாடல்களில் பேடையொடு சேவலையும், குயிலையும், மயிலையும், அன்றிலையும், நாரையையும், பைங்கிளியையும், பன்றியையும், ஏறையும் காண்கிறார்.
இப்பாடலிலும் தொடர்ந்து இப்பதிகத்தில் வரும் ஏனைய பாடல்களிலும் 'கண்டறியாதன கண்டேன்' என்று திருநாவுக்கரசர் நிறைவாகக் குறிப்பது தத்துவார்த்தமான ஒன்றாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான செய்தியைத் தருவதாய் அமைகிறது. இங்கு நமது கருதுகோளுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பினும், அப்பாடலைக் கையிலெடுத்த படியால் எனக்கு அவ்வரி அளித்த செய்தியைப் பதிவு செய்துவிட்டுக் கடந்து செல்வது இதனை வாசிப்போர் சிலருக்குப் பயனுள்ளதாய் அமையலாம். இப்பூவுலகின் இயக்கத்தில் இயற்கையின் ஒரு தலையாய நோக்கமாவது இனப்பெருக்கம். பெருகிய இனம் தனக்கென அமைத்துக் கொண்ட சமூக வாழ்வில் இனப்பெருக்கம் எனும் இயற்கையின் நோக்கத்தை அம்மையப்பன் எனும் வடிவிலேயே நிறைவேற்றிக் கொள்கிறது. எனவே நாவுக்கரசர் அம்மையப்பன் வடிவை ஒவ்வொரு
உயிரினத்திடமும் காண்கிறார். சமணம் போன்று சில சமயங்களில் இல்லற வாழ்விலிருந்து பயணித்துத் துறவறத்தில் வாழ்வு நிறைவுறக் காணலாம். சைவ சமயக் குரவரான திருநாவுக்கரசர் துறவற நிலையிலிருந்து மாறாமல் நின்று, அறம் சார்ந்த இல்லற மேன்மையைக் குறிக்க எண்ணினாரோ என்னவோ ! பறவையினமும் விலங்கினமும் தத்தம் இணையோடு எதிர்வந்து அவருக்கு இப்பொருள் உணர்த்துதலையே துறவியான அவர் 'கண்டறியாதன கண்டேன்' எனக் கூறுவதாய்க் கொள்ளலாம்.
Comments
Post a Comment