வேவத் திரிபுரம் சென்ற வில்லி

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் :


           நேற்றைய பாடலில் நாவுக்கரசர் திருவையாறு பதிகத்தில் சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு  சமநிலை பாராட்டியதைக் கண்டோம். அதே போன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தின் திருவார்த்தை பதிகத்தில் பன்றியைப் பேணுதல் காணலாம்.


"வேவத் திரிபுரம் செற்றவில்லி

வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ

ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே

எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்

ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்

எந்தை பெருந்துறை ஆதிஅன்று

கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த

கிடப்பறி வாரெம்பி ரானாவாரே"


பொருள் விளக்கம் :

திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய; 

செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய; 

எந்தை - என் தந்தையாகிய;

பெருந்துறை ஆதி -  திருப்பெருந்துறை முதல்வன்;

ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்; 

தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல; 

எம்பிரான் தான் வேடுவனாய் -  என் பிரானாகிய சிவன் தான் வேடனாக; 

கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர; 

இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்; 

ஏவுண்ட பன்றிக்கு - (அம்பு அல்லது வேல்)ஏவப்பட்டதால் இறந்த பன்றிக்கு; 

இரங்கி - கருணை மேலிட; ஈசன் அன்று - இறைவன் (சிவனார்) அன்று; 

கேவலம் - தானே; 

கேழலாய் - பன்றியாய் ஆகி;

பால் கொடுத்த கிடப்பு அறிவார் - (இறந்த பன்றியின் குட்டிகளுக்கு) பால் கொடுத்த திருவுளத்தை உணர்ந்தவர்கள்; 

எம் பிரான் ஆவாரே -  (அவர்களும் வணங்குவதற்குரிய) எம் தலைவர் ஆவாரே.

               

பின் குறிப்பு :

            பன்றிக்குத் தாயும் ஆனார் பெருந்துறை இறைவன். எனவேதான் மாதொருபாகனான தம் சிவபெருமானை, "தாயாய் முலையைத் தருவானே" என திருவாசகம் ஆனந்தமாலை பதிகம் ஐந்தாம் பாடலில் குறிப்பிட்டு அவனருள் வேண்டி நிற்கிறார் மாணிக்கவாசகர். 'மாமன்னன்' திரைப்படத்திலும் கதாநாயகனின் தாய், தாயை இழந்த பன்றிக் குட்டிக்குப் புட்டிப் பால் தந்து பேணுவதான காட்சியமைப்பு மேற்குறிப்பிட்ட திருவாசகக் காட்சியைக் கண் முன் நிறுத்துகிறது. திரையில் வரும் அத்தாய் உமை என்றால், படத்தில் தோன்றும் மாமன்னன் அன்பே சிவமாய் அமர்ந்திருத்தலாய்க் கொள்ளலாமே ! சமூக நீதியை இறைவழிக் காணும் ரசிகன் இப்படித்தான் சிந்திப்பானோ, என்னவோ !

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

மத்தளம் கொட்ட - வாரணமாயிரம் - நாச்சியார் திருமொழி