கம்பனும் திருத்தக்க தேவரும்

 பாலகாண்டத்தில் கோசல நாட்டின் மருத நில வருணனையில் நம்மைக் கிறங்க அடிக்கிறான் கம்பன் :

"தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க

கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க

தெண்டிரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ"

பொருள் : குளிர்ச்சி பொருந்திய நிலத்தில் (தண்டலை - தண் தலை) - அஃதாவது சோலையில் - மயில்கள் ஆடுகையில், தாமரையாகிய விளக்குகள் ஒளிர்ந்து நிற்க, மேகங்கள் (கொண்டல்கள்) முரசொலிக்க (முழவின் ஏங்க), குவளையாகிய கண்கள் விழித்து நோக்க, தெள்ளிய நீரலைகள் (தெண்டிரை - தெண் திரை) திரைச் சீலையாய்த் திகழ (எழினி காட்ட), தேனைப் பிழிந்தெடுத்த (தேம் பிழி) இனிமை(சுவை)யொத்த மகர யாழின் இசை போன்று வண்டுகள் இனிமையாய்ப் பாட, மருத நிலமகள் வீற்றிருக்கின்றாள்.

              கம்பனின் மேற்கூறிய இயற்கை வருணனை சீவக சிந்தாமணியின் கேமசரியார் இலம்பகத்தில் 1417 ஆம் பாடலை நினைவுறுத்துகிறது :

"சுனைகள் கண்களாகச் சூழ்ந்த குவளை விழியா

வனையலாகா உருவ நோக்கி மைந்தற் கிரங்கி

இனைவ போலும் வரையின் அருவி ........"

               பல்லவ தேசத்தில் இருந்து தக்க நாடு செல்லும் சீவகன் மலைகளையும் ஆறுகளையும் கடந்து செல்கிறான். அக்குறிஞ்சி நில அழகை நம் கண் முன் நிறுத்துகிறார் திருத்தக்க தேவர்.

                 சுனைகளைக் கண்களாகவும் சூழ்ந்திருக்கும் குவளை மலர்களை விழிகளாகவும் கொண்டு, மலையின் (வரையின்) அருவி அழுவது போல் உள்ளது (இனைவ போலும்). (எதற்காக அழ வேண்டும் ?) - சிற்பத்தில் வடிக்க இயலாத (வனையல் ஆகா) உருவத்தை (சீவகனை) நோக்குற்று, (கொடிய கானகத்தின் வழி செல்லும்) அம்மைந்தனுக்கு இரங்கி (அழுகிறது).

              குவளை மாதர்தம் கண்ணிற்கு உவமையாகவோ உருவகமாகவோ உருப்பெறுதல் இலக்கியங்களில் புதிதன்று.

" காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று"

(குறள் 1114)

என்று மாட்சிமை பொருந்திய தலைவியின் (மாண் இழையின்) கண்ணுக்கு தான் நிகரில்லையே என்று குவளை நாணித் தலை குனிந்த கதை பேசுவது வள்ளுவம்.

கம்பனின் அப்பாடலில் இயற்கை வருணனையான அழகியல் மட்டுமே மிளிர, திருத்தக்க தேவர் கதைப்போக்கில் வருணித்துப் போகிறார்.

மேலும் இயற்கை குறித்த இரண்டு வருணனைகளும் உருவக அணியில் அமைந்தமை கண்ணில் பட்டுத் தெறிப்பது.

Comments

Popular posts from this blog

உண்டால் அம்ம இவ்வுலகம்

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

படமாடக் கோயில் ... - திருமூலர்