கண்டனென் கற்பினுக்கு அணியை
கண்டனென் கற்பினுக்கு அணியை
பொதுவாக ஒரு அலுவல் மேற்கொண்டு முயற்சி செய்தவர் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ திரும்பி வந்து நம்மிடம் அச்செயல் நிகழ்வு பற்றிக் கூறத் தொடங்குகையில், "சென்ற காரியம் காயா பழமா என்று முதலில் சொல்" என்று அவரிடம் கேட்பது இயல்பான ஒன்று. அவரே முடிவினை அறிவித்துவிட்டு நிகழ்வு பற்றி நீட்டி முழக்குவது சிறப்பு. அதைத்தான் கம்பனின் அனுமன் செய்கிறான். அன்றைய உபந்நியாசகர்கள் முதல் இன்றைய சொற்பொழிவாளர்கள் வரை இலங்கை சென்று மீண்ட அனுமன் ராமனிடம், "கண்டேன் சீதையை" (கண்டனன் கற்பினுக்கு அணியை) என்று ஆரம்பித்த விதத்தை அழுத்தமாகத் சொல்லத் தவறுவதில்லை. அதிலும் " 'சீதையைக் கண்டேன்' என்றில்லாமல் 'கண்டேன் சீதையை' என்று தொடங்கி ராமனை முதலில் ஆறுதல் படுத்தினான் அனுமன்" என்றும் சிலாகிப்பர்.
"கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்டிரை அலை கடல் இலங்கைத் தென்னகர்
அண்டர்நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்றனுமன் பன்னுவான்"
பொருள் : கற்பினுக்கு அணியினை (சீதையை) என் கண்களால் கண்டேன் - தெள்ளிய அலைகளை உடைய கடல் (தெண் திரை அலை கடல்) வாய்க்கப் பெற்ற இலங்கையின் தெற்கில் அமைந்த நகரத்தில். அகிலத்தின் தலைவனே ! (அண்டர் நாயக). இனி உன் ஐயப்பாடும் பல நாட்களாய்க் கொண்ட துயரமும் (பண்டு உள துயரும்) துறப்பாயாக என்று அனுமன் கூறினான் (பன்னுவான்)."
அனுமன் தன் வாய்மொழியால், "கண்டேன் சீதையை" என்று, தான் சீதையைக் கண்ட நற்செய்தியில், கண்டதை முதலில் பகர்ந்தது உண்மைதான். ஆனால் தான் பேசும் முன்பே தன் செயலால் குறிப்பாய் அச்செய்தியை ராமனுக்கு உணர்த்திவிட்டான் என்கிறான் கம்ப நாடன். இதனைப் பெரும்பாலான சொற்பொழிவாளர்கள் சுட்ட மறந்திடுவர் போலும் !
"எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கைகொடு
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்"
பொருள் : (இராமனை வந்து) அடைந்தான் அனுமன் (எய்தினன் அனுமனும்). அடைந்து (எய்தி) பெருமைமிக்க அத்தலைவனின் (ஏந்தல் தன்) வீரம் செறிந்த, கழல் அணிந்த பாதங்களைத் (மொய் கழல்) தொழவில்லை (தொழுகிலன்). மாறாக, தாமரையை விட்டு இறங்கிய (முளரி நீங்கிய) திருமகள் போன்ற சீதையை - சீதையை அனுமன் கண்ட இலங்கை இருக்கும் திசையை - நோக்கித் தலையைத் திருப்பியவாறு (தையலை நோக்கிய தலையன்), கைகளைக் கூப்பி (கை கொடு) நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாய் வீழ்ந்து தொழுது (வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி) வாழ்த்தி அமைந்தான்.
"கண்டெனன்" என்றதன் மூலம் தலைவி உயிருடன் இருக்கிறாள் என்பதைப் பதிவு செய்கிறான் அனுமன். "கற்பினுக்கு அணியை" என்றதன் மூலம் அவள் உடல் அளவில் துன்பத்திற்கு ஆளாகவில்லை என்று விளக்கம் கூறி நாம் நழுவிக் கொள்ளலாம். "அவள் கற்புடன் திகழ்கிறாள்" என்பதே பொருள் என்பது இதற்கு முன்னர் அமைந்த பாடலின் மூலம் தெளிவு. அக்கால அளவுகோலின் படி அது பிற்போக்குத்தனமாகத் தோன்றவில்லை போலும் ! ஓர் எளிய கருத்தில் கூட முற்போக்கு சிந்தனை பெற, இராமாயண யுகமான திரேதா யுகத்திலிருந்து மகாபாரத யுகமான துவாபர யுகம் கடந்து கலியுகம் வரை மானுடம் பயணிக்க வேண்டியுள்ளதோ !
"திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன்
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று எனக்
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான்"
பொருள் : வலிமையும் திறமையும் (திண் திறல்) உடைய அவன் (அனுமன்) செயலைத் தெளிவாக நோக்கினான் ராமன் - சீதாதேவி சிறைப்பட்ட தென்திசை நோக்கி வீழ்ந்து வணங்கிய செயலை. குறிப்பறிந்து உணரும் திறன் படைத்த ராமன் (குறிப்பினால் உணரும் கொள்கையான்) வண்டுகள் உறையும் கூந்தலும் மனவலிமையும் கொண்ட (வண்டு உறை ஓதியும் வலியள்) சீதையை இவன் (அனுமன்) கண்டுவிட்டான்; அவள் கற்பு நெறியுடன் திகழ்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான்.
(தேன் சொரியும் மலர்களைச் சூடுவதால் வண்டு மொய்க்கும் கூந்தலை உடைய மகளிரை "வண்டு உறை ஓதி" எனக் குறித்தல் தமிழில் பொதுவான இலக்கிய மரபு).
Comments
Post a Comment