Posts

வேவத் திரிபுரம் சென்ற வில்லி

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் :            நேற்றைய பாடலில் நாவுக்கரசர் திருவையாறு பதிகத்தில் சைவ நெறி உணர்வால் எந்த வேறுபாடும் கொள்ளாமல் பன்றியை ஏனைய விலங்குகளோடு  சமநிலை பாராட்டியதைக் கண்டோம். அதே போன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தின் திருவார்த்தை பதிகத்தில் பன்றியைப் பேணுதல் காணலாம். "வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதிஅன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம்பி ரானாவாரே" பொருள் விளக்கம் : திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்து அழிய;  செற்ற வில்லி - போரிட்ட வில்லினையுடைய;  எந்தை - என் தந்தையாகிய; பெருந்துறை ஆதி -  திருப்பெருந்துறை முதல்வன்; ஏவல் செயல் செய்யும் - இட்ட பணியினைச் செய்யும்;  தேவர் முன்னே - தேவர்கள் முன் செல்ல;  எம்பிரான் தான் வேடுவனாய் -  என் பிரானாகிய சிவன் தான் வேடனாக;  கடி நாய்கள் சூழ - கடிக்கும் நாய்கள் சூழ்ந்து வர;  இயங்கு காட்டில் - வலம் வந்த காட்டில்;...

மாதர்ப் பிறைக் கண்ணியானை

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர்சுமந்து ஏந்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதன கண்டேன்"          (நாவுக்கரசர் தேவாரம்; திருவையாறு பதிகம் பாடல் 1) பொருள் விளக்கம் : மாதர்பிறை - அழகிய பிறையினை;  கண்ணியானை - தலையில் அணியாகச் சூடியவனை; மலையான் மகளொடும் பாடி -  மலையின் தலைவனது மகளோடு துதித்துப் பாடி; போதொடு - மலர்களோடு;  நீர் சுமந்தேத்தி - வழிபாட்டிற்கு உரிய நீரினைச் சுமந்து ஏற்றி; புகுவார் அவர்பின் புகுவேன் - (அடியார்கள்) செல்வார்கள், அவர்கள் பின் செல்வேன்; யாதும் சுவடு படாமல் - நிலத்தில் பாதச்சுவடு படாத அளவு மென்மையாய் நடந்து சென்று; ஐயாறு அடைகின்றபோது -  திருவையாறு அடைகின்றபோது; காதல் மடப்பிடியோடு - காதலும், மடம் எனும் பெண்மை உணர்வும் கொண்ட பெண் யானையோடு; களிறு வருவன கண்டேன் - ஆண் யானை வரக் கண்டேன்;  கண்டேன் அவர் திருப்பாதம் -  அம்மையப்பனின் திருப்பாதம் கண்டேன்;...

கேள்விக்கு இனியை கட்கின்னாயே !

 தினம் ஒரு தமிழ்ப் பாடல் : வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில்  பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, நமது சென்ற பதிவில் ("பாரி பாரி என்று பல ஏத்தி ......") கபிலர் பாரி வள்ளலை இகழ்வது போலப் புகழக் கண்டோம். இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம். "நீயே அமர்காணின் அமர்கடந்து அவர் படை விலக்கி எதிர் நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு கேள்விக்கு இனியை கட்கின் னாயே ! அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின் ஊறுஅறியா மெய் யாக்கை யொடு கண்ணுக்கு இனியர் செவிக்குஇன் னாரே! அதனால் நீயும் ஒன்று இனியை அவரும்ஒன்று இனியர் ஒவ்வா யாவுள மற்றே ? வெல்போர்க் கழல்புனை திர...

ஈன்ற ஞான்றினும் பெரிதே

 புறநானூற்றுத் தாய் ஒருத்தி தன் மகன் தான் களத்தில் விழுவதற்கு முன் களிற்றியானை (ஆண்யானை) ஒன்றை வேல் எறிந்து வீழ்த்தினான் என்று அறிந்து அவனை ஈன்ற பொழுதை விடப் பெரிதும் உவந்தாள். அது வீரம் பற்றிய புறநானூற்று பாடல் ஒன்றின் முதற்பகுதி. அத்தோடு முடிந்தால், "அவள் ஒரு வீரத்தாய் மட்டும்தானா ? தாய் இல்லையா ? மகனை இழந்த செய்தி கேட்டதும் தனது உலகமே இருண்டது போன்ற இயற்கை உணர்வெல்லாம் ஒரு வீரப் பெண்மணிக்கு ஏற்படாதா ? வீரம் என்பது உணர்வற்ற வறட்டுத்தனம்தானா ?" என்ற கேள்விகள் எழ வாய்ப்பு உண்டு. இக்கேள்விகளுக்கு விடையைப் பாடலில் பிற்பகுதி தருகிறது. மூங்கிலின் உட்தங்கிய மழைநீரானது காற்றில் மூங்கில் அசையும் போது வடியும் அல்லது சிதறுமே, அதைவிடப் பல மடங்கு அவளது கண்கள் நீரை வெளிப்படுத்தின. "மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"                               (புறநானூறு 277) ப...

துணையொத்த கோவையும்

 அகத்திணை ஒழுக்கத்தில் பக்தி இலக்கியமாக  நாவுக்கரசரின்  திருத்தாண்டகம் முன்னம் இடம்பெற்றது. இஃது பன்னிரு திருமுறைகளில் ஆறாம் திருமுறையில் உள்ளது. பக்தானாகிய தலைவி திருவாரூர் தியாகேசனாகிய தலைவனுடன்  உடன்போக்கில் (ஓடிப்போதலில்) உய்வினை (முக்தியை) நோக்கிச் செல்லும் காட்சி அது. இப்போது இதற்கு முந்தைய பாடலில் எட்டாம் திருமுறையில் அமைந்த மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் திருப்பாதிரிப்புலியூர் இறைவனுடன் உடன்போக்கினைக் காணும் பேறு பெற்றோம். தற்போது பதினொன்றாம் திருமுறையில் உள்ள பட்டினத்தாரின் திருஏகம்பமுடையார் திருவந்தாதிப் பாடலொன்று காணலாம் (பரவலாக அறியப்பட்ட 'முன்னை இட்ட தீ முப்புரத்திலே' பாடிய  பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்). இப்பாடலில் தலைவன் திருஏகம்பமுடையார் என்பது அந்தாதியின் தலைப்பினால் தெற்றென விளங்கி நிற்பது. இன்றைய பட்டினத்தார் பாடலும் நாம் நேற்று கண்ட திருக்கோவையார் பாடலும் ஒரே காட்சிக் களத்தைக் கொண்டவை. தினம் ஒரு தமிழ்ப் பாடல் : "துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் ...

அனிச்சம் பூ கால் களையாள்

 தினம் ஒரு தமிழ்ப் பாடல்                  - சுப.சோமசுந்தரம்             எங்கள் இல்லத்தின் முற்றத்தில் ஒரு ஓரமாக முடங்கிக் கிடந்த உரலை ( ஒரு காலத்தில் உயிரோட்டமாய் இருந்து கிரைண்டர் யுகத்தில் தான் முடக்கப்பட்டதால் நம்மையும் முடங்க வைத்த பொருள்) நகர்த்த வேண்டியிருந்தது. தனியாளாய் நான் முயல, அந்நேரத்தில் வந்த என் ஆருயிர்த்தோழன், “எலே ! தனியாவா தூக்குத? ஒம் முதுகெலும்பு ஒடிஞ்சி இன்னிக்கு எழவுக் கொட்டு அடிக்கணும்ல !” என்றான். இந்த மிகைப்படுத்தலை வள்ளுவன் நலம் புனைந்துரைத்தலில் மக்களிடமிருந்து எடுத்தாளக் காணலாம் : "அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு நல்ல படாஅ பறை"            (குறள் 1115; நலம் புனைந்துரைத்தல்)         மலர்களில் மென்மையானது அனிச்சம். அந்த அனிச்சப் பூவின் காம்பினைக் (கால்) களையாமல் சூடிக் கொண்டாள் (பெய்தாள்). மென்மை மலருக்கு மட்டுந்தானே ! காம்பிற்கு இல்லையே ! எனவே அக்காம்பின் கனத்தைக் கூடத் தாங்க இயலாத அவளது இடை வருத்தத்திற்கு (நுசிப்பிற்கு)...

இலக்கியத்தின் உறுபொருள்

                இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது.            மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812இல் "வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்" என்று சுக்ரீவனிடம் நட்பு பாராட்டுகிறான் இராமன். பாடற் பொருள் : விண்ணுலகானாலும் மண்ணுலகானாலும் உன்னைப் பகைத்தவர் (செற்றவர்) என்னையும் பகைத்தார்; தீயவராய் இருப்பினும் உனக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர்.             இலக்கியம் அறிந்தோர் ஒரு பாடலை மேம்போக்காகப் பொருள் கொள்வதில்லை. 'தீயரே எனினும்' என்றது நட்பின் திண்மை பற்றிக் கூற வந்த உயர்வுநவிற்சி. அவ்வளவே ! மேலும் அது தேர்ந்து தெளிந்த நட்பின் மீது உள்ள நம்பிக்கை. அத...